மாநில நிதி, நிதி ஆதாரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் - தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பசியால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர் என்றும் மாநில அரசின் நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வமும் கொண்ட அ.தி.மு.க. அரசைக் கண்டித்து கருப்புச் சின்னம் அணியும் போராட்டத்தை நடத்துவது எனத் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுத்தோம்.
இது அரசியல் போராட்டம் அல்ல; மக்களைக் காக்கும், சமூகப் பாதுகாப்புப் பிரச்சினைக்கான போராட்டம் என்பதால், அனைத்துக் கட்சியினர் மட்டுமல்ல; தமிழக மக்களும், பெரும் எண்ணிக்கையிலான மகளிரும், கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை அ.தி.மு.க. அரசுக்கு தெரிவித்துள்ளார்கள்.
‘கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்’ என்று தமிழக மக்கள் எழுப்பிய முழக்கங்களின் பேரொலி, கோட்டையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் முதல்-அமைச்சரின் காதுகளில் நிச்சயம் எதிரொலித்து பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கும்.
இதுவரை காட்டிய அலட்சியம், இதுவரை ஆட்கொண்டிருந்த மெத்தனம் ஆகியவற்றை விடுத்து ஆபத்து-பேராபத்து, அழிவு-பேரழிவு என பூதாகரமாக உருவெடுத்துவரும் கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கு, ‘எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்த்திடாமல்’, அ.தி.மு.க. அரசு தனது சிந்தனையை உகந்த வழியில் செலுத்த வேண்டும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு சந்தையிலிருந்து, பல மாவட்டங்களுக்கும், வேறு மாநிலத்திற்கும் பரவிய நோயை முன்கூட்டியே தடுத்திருக்கலாம். கோயம்பேடு பகுதிக்கு வந்து சென்றவர்கள் மூலமாக பயணம் செய்து பரவிய தொற்றே, இப்போது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடியபோது, கோயம்பேடு சந்தையையும் மூட வேண்டும் அல்லது பரவலாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனது ஏன்?.
ஊரடங்குக் காலத்திலும் பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தியது தமிழக அரசு. ‘ரேபிட் கிட்’ வாங்கியதிலும் ஊழல்.
மக்களைக் கூட்டமாகக் கூடாதீர்கள் என்று சட்டம் போட்டுவிட்டு; மதுக்கடைகளை திறப்பது, சமூகத் தொற்றை ஏற்படுத்திப் பரப்பும் எனத் தெரிந்தும், அரசு இதைச் செய்வது, அரசின் மக்கள்நலனை மறந்த, பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
லட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் பசியுடனும் பட்டினியுடனும் முடங்கி உள்ளனர். ஆனால், “தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார். அவருக்கு சவாலாகவே சொல்கிறேன். “பசித்திருப்பவர்கள் தகவல் தாருங்கள்” என்று ஒரு பொதுத் தொலைபேசி எண்ணை தமிழக அரசின் சார்பில் தைரியம் இருந்தால் அறிவியுங்கள். உங்களுக்கு எத்தனை லட்சம் பேர் தகவல் தருகிறார்கள் என்று பாருங்கள்.
கோட்டையில் உட்கார்ந்து கொண்டு, இன்னமும் டெண்டர் தேதிகளையும், காண்ட்ராக்ட் கமிஷன்களையும் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மக்களின் பசி, பட்டினிப் பற்றி என்ன தெரியும்? ரேஷன் கார்டுக்கு 5000 ரூபாய் வழங்கி அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும்; மாநில அரசின் 2 லட்சம் கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.3,850 கோடி மட்டுமே செலவாகும்.
எதைக் கேட்டாலும் தமிழக அரசின் நிதி நிலைமையைக் காரணம் காட்டுகிறார்கள். மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விபரங்களும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். அதுதான் தொழிற்துறையினர், இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது எதிர்கால தேவையை திட்டமிட உதவுவதாக இருக்கும்.
பொருளாதாரத்தை மீட்க வழியில்லாத இந்த அரசுக்கு தெரிந்த ஒரே வழியாக மதுபானக் கடைகள் மட்டுமே இருப்பது அவமானமாகும்!
இவை அனைத்தையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கும் வகையில் கருப்புச் சின்னம் அணிதல், கருப்புக்கொடி பிடித்தல் ஆகிய வடிவங்களில் கண்டனப் போராட்டம் நடத்தி உள்ளோம். இந்தப் போராட்டம் தமிழக அரசின் மூடிய விழிகளை நிச்சயம் திறக்கும் என நம்புகிறோம்.
மத்திய அரசிடம் நிதி கேட்க முதுகெலும்பு இல்லாமல், மதுபானக் கடைகளைத் திறந்து நிதிநெருக்கடியைச் சமாளிக்க முயல்வதும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிதி ஒதுக்க முடியாமல் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதும் சரியுமல்ல, முறையுமல்ல!
இது கணித்திடவியலாத பேராபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். கொரோனா என்ற சுழலில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட வேண்டாம். தயவு செய்து தமிழ் மக்களைக் கைவிட்டுவிட வேண்டாம். காலத்தின் பழியிலிருந்து தப்பிக்க நல்லவழி காணுங்கள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.