தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை கேட்டு வழக்கு - ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக் கடைகளை திறக்கக் கூடாது என்றும், கடையை திறக்க தடை கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2020-05-05 22:45 GMT
சென்னை, 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்தவர் வக்கீல் ராம்குமார் ஆதித்தன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சில்லரை மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் நாளை (வியாழக்கிழமை) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டதால், மாநில எல்லையை தாண்டி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் செல்வார்கள் என்பதால், டாஸ்மாக் கடையை தமிழக அரசு நிபந்தனைகளுடன் திறந்துள்ளது.

ஆனால், அண்டை மாநிலங்களில் விதிக்கப்பட்ட இதுபோன்ற நிபந்தனைகளை அங்குள்ள மக்கள் கடைப்பிடிக்காததால், மதுக்கடை திறந்து அடுத்த சில நிமிடங்களில் மூடப்பட்டு விட்டன. எனவே தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளை அமல்படுத்துவது என்பது சாத்தியம் இல்லாதது.

இந்த ஊரடங்கால் ஏற்கனவே, தமிழக போலீசார் கடுமையாக பணியாற்றி மன அழுத்தத்துடன் உள்ளனர். தற்போது மதுக்கடை திறப்பதால், பணத்துக்காக பலர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடுவார்கள். இதனால் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் போலீசார் கடுமையான சிரமத்துக்கு உள்ளாவார்கள். ஊரடங்கால் கொரோனா வைரஸ் தொற்றின் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் சமுதாயத்தில் பரவாமல் தடுக்கப்பட்டன. இப்போது மதுக்கடை திறந்தால், கடைக்கு முன்பு பொதுமக்கள் அதிகம் கூடுவர். இதனால், வைரஸ் தொற்று அதிகரிக்கும்.

மேலும் ஊரடங்கால் தெரு வியாபாரிகள், அமைப்புசாரா தொழிலாளிகள், வக்கீல்கள், திரைத்துறையினர் என ஒட்டுமொத்த மக்களும் வருமானத்தை இழந்துள்ளனர். அத்தியாவசிய உணவு பொருட் களை வாங்க அவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

பெண்களுக்கு கஷ்டம் இந்த நிலையில், மதுக்கடையை திறந்தால், பல ஆண்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வைத்திருந்த பணத்தை மதுபானம் வாங்க செலவு செய்வார்கள். இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் பெண்கள் கடுமையாக கஷ்டத்துக்கு உள்ளாவார்கள். எனவே, டாஸ்மாக் மதுக்கடையை நாளை (வியாழக்கிழமை) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 4-ந்தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்