பா.ம.க. ஒன்றிய செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
பா.ம.க. ஒன்றிய செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
சின்ன சேலம் மூங்கில்பாடியில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சக்திவேலை தாக்கிய இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது மட்டும் போதாது. வழக்குப்பதிந்து கைது செய்து, பணியிடை நீக்கம் செய்யும் அளவுக்கு அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன.
அந்த இன்ஸ்பெக்டர் திண்டிவனத்தில் பணியாற்றிய போது பா.ம.க.வினர் இருவரைத் தாக்கியது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்டவர்கள் காவல் பணியில் நீடிக்கக்கூடாது.
அவருக்கு கல்வராயன்மலை பகுதியில் மது ஒழிப்பு பணி வழங்கப்பட்டு இருந்த நிலையில், அவர் குடிபோதையில் மூங்கில்பாடி வந்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு பா.ம.க. நிர்வாகியை தாக்கியிருப்பது காவல்துறையின் புனிதத்தை கெடுக்கும் செயல். காவல்துறையின் நோக்கங்களுக்கு மாறாக, மனித உரிமைகளை மீறுவதையும், அப்பாவிகளை தாக்குவதையும் மட்டுமே பிழைப்பாக கொண்ட இவரை போன்றவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.