அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லும் பொதுமக்களுக்கு 3 வண்ணங்களில் ‘பாஸ்’ - விரைவில் வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தகவல்
அத்தியாவசிய பொருட் களை வாங்க வெளியே செல்லும் பொதுமக்களுக்கு விரைவில் 3 வண்ணங்களில் ‘பாஸ்’ வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்தகட்டமாக பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். சென்னையில் இதுவரை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்ட பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. அதன்படி 2 ஆயிரத்து 488 நபர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை மாநகராட்சி டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், 1,746 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 775 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் 76 இடங்கள் தொற்று நோய் கட்டுப்படுத்தும் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக, மாநகராட்சி சார்பில் 10 பரிசோதனை நிலையங்களை தொடங்கி உள்ளோம்.
இதன்மூலம் தினந்தோறும் 500 பேரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்யலாம். மேலும் கூடுதலாக 10 பரிசோதனை நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘ராப்பிட் டெஸ்ட்’ கருவியை பொறுத்தவரையில் மாநகராட்சி சார்பில் தனியாக 50 ஆயிரம் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தமிழ்நாடு மருந்து சேகரிப்பு கழகம் என்ன விலை நிர்ணயம் செய்திருக்கிறார்களோ, அதே விலையில் நாங்களும் வாங்க முடிவு செய்துள்ளோம். இந்த ‘ராப்பிட் டெஸ்ட்’ கருவிகள் இதுவரை இந்தியாவிற்கு கொண்டு வரப்படவில்லை. நெல்லையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் 3 வண்ணங்களில் ‘பாஸ்’ வழங்கப்பட்டது போல், சென்னையிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகத்திலும் தினசரி ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் சாதாரணமாக விற்பனை ஆகும். ஆனால் இப்போது 11 முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை ஆகிறது. அம்மா உணவகத்தில் அரிசி, பருப்பு போன்ற எதுவும் பற்றாக்குறை இருந்தது இல்லை.
டாக்டர்களுக்கும் கொரோனா அறிகுறி இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். டாக்டர்களாக இருந்தாலும், அரசு விதிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். தினசரி நாளிதழ் வினியோகம் செய்யும் நபர்களுக்கு தேவையான முக கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவற்றை அந்தந்த நிறுவனங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.