வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்: சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இரவு-பகலாக உற்பத்தி - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சமையல் கியாஸ் சிலிண்டர் உற்பத்தி இரவு பகலாக நடந்து வருவதாகவும், எனவே தட்டுப்பாடு ஏற்படும் என்று வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-04-10 22:30 GMT
சென்னை, 

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) தென்மண்டல பொதுமேலாளர் (கார்ப்பரேட்) ஆர்.சிதம்பரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு நெருக்கடி தருணத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய சமையல் கியாஸ் சிலிண்டருக்கான கூடுதல் தேவையை எதிர்கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் முழு வீச்சில் தயாராக உள்ளது. அதன்படி நிறுவனத்தினுடைய பாட்லிங் ஆலைகள் இரவு நேரங்களிலும் பொது விடுமுறை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு போதுமான சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். எனவே வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்து கியாஸ் முன்பதிவு செய்ய வேண் டாம். சிலிண்டர்கள் பெறுவதற்கு கியாஸ் விநியோகஸ்தர் அலுவலகங்களுக்கோ, குடோன்களுக்கோ செல்ல வேண்டாம்.

தங்கள் வீடுகளிலிருந்தே செல்போன் அழைப்பு மூலமாகவும், ‘வாட்ஸ்-அப்’ (75888 88824) செயலி மூலமாகவும் கியாஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெறலாம்.

சிலிண்டருக்கான பணத்தை ‘இந்தியன் ஆயின் மொபைல்’ செயலி மூலமாக அல்லது https://cx.in-d-i-a-n-o-il.in இணையதளம் மூலமாக செலுத்தலாம். சிலிண்டர் முன்பதிவு செய்தவுடன் அனுப்பப்படும் குறுந்தகவலில் உள்ள ‘பேமென்ட் லிங்க்’கை பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம். இதனால் ரொக்கப் பரிமாற்றமும், நேரடி சந்திப்புகளும் தவிர்க்கப்படும். 1906 என்ற கியாஸ் அவசர உதவி எண் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம், தங்களுடைய வர்த்தகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் ‘டிரக்’ ஓட்டுநர்கள், டெலிவரி பணியாளர்கள் ஆகியோருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வகுத்துள்ளது. கொரோனா பாதிப்பால் மரணமடையும் பட்சத்தில் கருணைத் தொகை ரூ.5 லட்சம் காப்பீடு வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தேசித்துள்ளது.

பிரதமரின் உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நாடெங்கிலும் உள்ள 3 கோடியே 70 லட்சம் உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் 3 மாதங்களான தொகை மொத்தமாக செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 30 லட்சம் உஜ்வலா திட்ட பயனாளிகள், தங்கள் கணக்கில் வரவு பெற்றுள்ள தொகையை செலுத்தி டெலிவரி செய்யப்படும் சிலிண்டரைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏப்ரல் மாதத்திற் கான தொகை வங்கி கணக்கில் மாற்றப்படுவதற்கு முன்பே சிலிண்டர் டெலிவரி பெற்றவர்களும் 15 நாட்கள் இடைவெளியில் இலவச சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்து பெறலாம். அதற்கான காகித வடிவ ஆவணம் எதுவும் கேட்க மாட்டார்கள். அத்தாட்சி ஆவணத்தை டிஜிட்டல் வழிமுறையில் காண்பிக்கலாம். காகித வடிவ ஆவணங்களை பதிவேடுகள் பராமரிக்க ஏதுவாக ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்