கொரோனா பரவல் நீங்கும் வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனா பரவல் நீங்கும் வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் வினா என்னவெனில், வரும் 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்படுமா.... விலக்கிக் கொள்ளப்படுமா? என்பது தான். இந்த வினாவுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் விடை எளிமையாக இருக்க வேண்டும் என்பதை விட, எல்லோரையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியமாகும்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் பாதிக் கப்படும். ஏராளமானோர் வேலை இழப்பார்கள். அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் என்று ஒரு தரப்பினரால் எழுப்பப்படும் குரல் கள் கேட்காமல் இல்லை. அந்த ஐயங்கள் அனைத்தும் உண்மை தான்.
அதுமட்டுமல்ல தமிழக அரசின் சொந்த வரி வருவாயாக மட்டும் சராசரியாக ரூ.11,127.50 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு கூட அரசுக்கு கிடைத்திருக்காது என்பதையும் நான் அறிவேன். இந்த இழப்புகளை எல்லாம் பின்னாளில் சரி செய்து கொள்ளலாம். வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும், வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கும் அரசின் சார்பில் வாழ்வாதார உதவிகளை வழங்கலாம்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவி ஆயிரக்கணக் கில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதை யாராலும் ஈடு செய்ய முடியாது. அதனால் தான் ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக இருக்கிறது.
ஒருவேளை மத்திய அரசே ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் கூட, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.