நீலகிரியில் புதிய மருத்துவக்கல்லூரி வேண்டுமா? வேண்டாமா? - தி.மு.க. உறுப்பினருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீலகிரியில் புதிய மருத்துவக்கல்லூரி வேண்டுமா?, வேண்டாமா? என்று தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன் கேள்விக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.;

Update:2020-03-12 04:30 IST
சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் அன்பரசன்:- தமிழகத்தில் மாபெரும் மரம் நடும் திட்டத்தை 2011-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 5 கோடியே 40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் நிலை என்ன?. யானைகள் கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2007-ம் ஆண்டு 3,866 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2017-ம் ஆண்டு 2,761 ஆக குறைந்துள்ளது. சமூகவிரோதிகள் தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுவதும், காடுகளில் தண்ணீர் இல்லாததும் தான் இதற்கு காரணம். இந்த நிலை தொடர்ந்தால், யானை இனம் அழிந்துவிடும்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:- யானைகள் வேட்டையாடப்படுவதாக சொல்லப்படுவது தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை. வன அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைகள் அருகில் உள்ள கேரள, கர்நாடக வனப்பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றன.

உறுப்பினர் அன்பரசன்:- தமிழகத்தில் வனச்சாலைகள் பல இடங்களில் போடப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ளன. பல இடங்களில் வாகனப்போக்குவரத்தே நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, வனச்சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:- சாலைகளின் விவரங்களை கொடுத்தால் நிதி ஆதாரத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர் அன்பரசன்:- மழைக்காலங்களில் நீலகிரியில் அதிக அளவு நிலச்சரிவு ஏற்படுகிறது. இப்போது அங்கு 25 ஏக்கர் நிலத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாற்று இடத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீலகிரி மாவட்ட மக்கள் ஒரு புதிய மருத்துவக்கல்லூரி வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் அங்கே மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து, மத்திய அரசின் அனுமதி பெற்று, அதுகுறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவக்கல்லூரி வேண்டுமா?, வேண்டாமா? என்பது பற்றி உறுப்பினர் சொன்னால் சரியாக இருக்கும். ஏன் என்றால், மலைப்பிரதேசத்தில் இருந்து கீழே வந்து தான் அவர்கள் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, பல்வேறு இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். நீங்கள் சொன்ன அந்த குறிப்பிட்ட பகுதியில் தான் சில மரங்கள் இருக்கின்றன. 

அவற்றை வெட்டுவதற்கும் மத்திய அரசிடம் இருந்து நாங்கள் அனுமதி கேட்டு இருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் அங்கே கட்டிடம் கட்டப்படும். ஒரு மரம் வெட்டப்பட்டால், 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதற்கு உட்பட்டு தான் நிலம் எடுக்கின்ற பணி மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது முழுக்க முழுக்க மக்களுடைய நலன் கருதி எடுக்கப்படுகின்ற திட்டம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்