கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு சீருடை - தமிழக அரசு உத்தரவு
கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் நிறத்தில் சீருடை அணிய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.;
சென்னை,
கூட்டுறவு துறையின்கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, தமிழக நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பற்றி பரிசீலிப்பதற்காக கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், சிறப்பு ஊக்கத்தொகை என்று ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5 வீதம் வழங்க கோருவது ஏற்புடையது அல்ல. மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அடிப்படை வசதிகளான நாற்காலி, மேஜை, மின்விசிறி, மின்விளக்கு, கழிவறை வசதிகள் ஆகியவற்றை இன்னும் 3 ஆண்டுகளுக்குள் செய்துதர வேண்டும்.
கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு அடிப்படை விதிகள் பொருந்தாது. எனவே அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு கால விடுப்பு அவர்களுக்கு பொருந்தாது. அதுபற்றி கூட்டுறவு சங்க பதிவாளர் அளவில் ஆய்வு செய்து முடிவு எடுக்கவேண்டும்.
அரசின் சேவை திட்டங்கள் அறிவிக்கப்படும்போது அவர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்வதற்காக ஒரு ரேஷன் கார்டுக்கு 50 பைசா வீதம் அவர்களுக்கு வழங்கலாம். ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்காக அரசு நிர்ணயம் செய்யும் நிறத்தில் சீருடை அணிய பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.