“பெரியார் பற்றி ரஜினிகாந்த் கூறியதில் எந்த தவறும் இல்லை” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேட்டி
“பெரியார் பற்றி ரஜினிகாந்த் கூறியதில் எந்த தவறும் இல்லை” என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.;
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் புதிய அலுவலக கட்டிடங்களுக்கு பூமிபூஜை நடந்தது. விழாவில் அடிக்கல் நாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
1971-ம் ஆண்டு தி.க. பேரணியில் நடந்ததைத்தான் ரஜினிகாந்த் பேசியுள்ளார். ரஜினிகாந்தை மிரட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயலை தி.க.வினர், தி.மு.க.வினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ரஜினிகாந்த் ரசிகர்கள் பொறுமை காக்கின்றனர்.
தவறு இல்லை
உருவபொம்மையை எரிப்போம், வீட்டை முற்றுகையிடுவோம் என மிரட்டுகின்றனர். ரஜினிகாந்த் நியாயவாதி. நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுகிறார். நடந்ததை அப்படியே பேசி உள்ளார். ராமபிரான் படத்தை தி.க. பேரணியில் நிர்வாணமாக கொண்டு வந்தது உண்மையா-இல்லையா?
வேற்று மதத்தை சேர்ந்த கடவுளை இம்மாதிரியாக செய்து இருந்தால் சும்மா விடுவார்களா? இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் தேர்தலில் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள். ரஜினிகாந்த் பேசியதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர். தந்தை பெரியார் இல்லை என்றால் என் போன்றவர்கள் அமைச்சராகி இருக்க முடியாது. அவர் கூறிய பகுத்தறிவு கருத்துக்களையும், மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஆன்மிகத்தை பொறுத்தவரை ரஜினிகாந்த் கூறியதில் தவறு ஏதும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.