பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்களில் பாதி கட்டணம் வசூலிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் எம்.பி. வேண்டுகோள்
பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக பஸ்களில் பாதி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாளான தை பொங்கலையொட்டி நடப்பாண்டு சிறப்பு பஸ் இயக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை. சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போதிலும்கூட நகரங்களில் இடம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கானோர் பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு செல்வதில்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மையாகும்.
இதற்கு முதல் காரணம் பொருளாதாரம். 2-வது காரணம் கலாசாரம் ஆகும். பொங்கல் திருநாளையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும்கூட, அவற்றில் மறைமுகமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களாக பணியாற்றி வருபவர்கள் அதிக கட்டணம் செலுத்தி சொந்த ஊருக்கு சென்று வர வசதி இல்லை என்பதால் பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றனர்.
இதேபோல நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து அங்குள்ள கலாசாரத்தில் கலப்போருக்கு, காலப்போக்கில் தமிழர் திருநாளின் மகத்துவம் புரிவதில்லை. தீபாவளி, ஆங்கில புத்தாண்டு போன்ற திருவிழாக்களை கொண்டாடும் அளவுக்கு தமிழர் திருநாளையோ, தமிழ் புத்தாண்டையோ அவர்கள் கொண்டாடுவதில்லை என்பது கசப்பான உண்மை. இந்த நிலையை மாற்றி பொங்கல் கொண்டாட்டத்தை சிறப்பானதாக மாற்றியாக வேண்டும்.
இதற்கு மிகச்சிறந்த வழி சொந்த ஊருக்கு செல்வதற்கான பஸ் கட்டணத்தை கணிசமாக குறைப்பதுதான். குறைந்த செலவில் சொந்தங்களையும், நண்பர்களையும் சந்தித்து வரலாம் என்ற எண்ணத்தில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்வருவார்கள். இதனால் கிராமப்புறங்களில் பொங்கல் திருநாள் கடந்த காலங்களில் இருந்ததை போன்று மகிழ்ச்சி கொண்டாட்டமாக மாறும்.
எனவே பொங்கலையொட்டி வருகிற 13-ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து உட்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களிலும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு 17, 18, 19 ஆகிய தேதிகளில் உட்புற பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களிலும் 50 சதவீத (பாதி) கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அரசு அறிவிக்கவேண்டும். இதன்மூலம் அனைத்து தரப்பினரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.