8-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம்: நாடு முழுவதும் 12½ லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு

நாடு முழுவதும் 8-ந்தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் 12½ லட்சம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-01-02 23:00 GMT
சென்னை,

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருக்கின்றன. இதில் மத்திய அரசு ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் இந்த வேலைநிறுத்தம் தொடர்பான ஆயத்தக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை அலுவலக (ஆயக்கார் பவன்) வளாகத்தில் நேற்று நடந்தது.

மத்திய அரசு ஊழியர்கள்

இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைபாண்டியன், வருமானவரி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் மீராபாய், பொதுச்செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன், மத்திய அரசு அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க தலைவர் சிதம்பரம், தபால் ஊழியர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், டி.ஆர்.இ.யு. துணைத்தலைவர் இளங்கோவன், கல்பாக்கம் அணு ஆற்றல் ஊழியர் சங்கத்தின் தலைவர் தனஞ்ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 8-ந்தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்து சங்கத்தின் தலைவர்கள் ஊழியர்களிடம் விளக்கினர்.

முன்னதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

12½ லட்சம் பேர் பங்கேற்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வருகிற 8-ந்தேதி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்து இருக்கின்றனர். அதில் மத்திய அரசு ஊழியர்களும் பங்கு பெறுகின்றனர்.

மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் நவீன பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. இதனை எதிர்த்தும், 7-வது சம்பள கமிஷனில் நிறைவேற்றுவதாக அறிவித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியும், தொழிலாளர் சட்டங்களை மாற்றி குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.4,628 என்று நிர்ணயம் செய்ததை எதிர்க்கவும் உள்ளோம்.

இதில் நாடு முழுவதும் 12½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், தமிழகத்தில் வருமான வரி, ஏ.ஜி. அலுவலகம், கல்பாக்கம் அணு ஆற்றல் துறை, சாஸ்திரிபவன், ராஜாஜிபவன், தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். எங்களோடு சேர்த்து நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்