உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

குடியுரிமை சட்ட நகலை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-12-13 15:06 GMT
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் மேடையில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்தனர்.

அதன்பிறகு மேடையை விட்டு இறங்கிய உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது போலீசாருக்கும், தி.மு.க. இளைஞரணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

கைதான உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “குடியுரிமை சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர் அகதிகளுக்கும் எதிரானது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை தி.மு.க. இளைஞரணியின் போராட்டம் தொடரும்” என்றார். கைதான உதயநிதி ஸ்டாலின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது குடியுரிமை சட்ட நகலை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி  ஸ்டாலின் உட்பட திமுகவினர் 644 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்