காலில் அறுவை சிகிச்சை: கமல்ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
கமல்ஹாசன் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரை, மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.;
சென்னை,
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவருடைய வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை சரிசெய்வதற்காக நடந்த அறுவை சிகிச்சையின்போது, ‘டைட்டேனியம்’ கம்பி காலில் பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் இருந்த வேலைப்பளு காரணமாக இந்த கம்பியை குறிப்பிட்ட காலத்தில் அவரால் அகற்ற முடியவில்லை.
இந்த நிலையில் அந்த கம்பியை அகற்றுவதற்காக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை என 3 மணி நேரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதில் கமல்ஹாசன் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி வெற்றிக்கரமாக அகற்றப்பட்டது.
மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அவர் தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் சில நாட்கள் கமல்ஹாசன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வருகிற 26-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து கமல்ஹாசன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியனும் உடன் இருந்தார்.