நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை; அணைகள் நீர்மட்டம் உயர்கிறது
நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லை,
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. நெல்லையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. காலை 10 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பாளையங்கோட்டை ராமசாமி கோவில் தெப்பக்குளத்தின் வடக்கு பகுதி சுவர் வலுவிழந்து காணப்பட்டது. இந்த சுவர், தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அணைகள் நீர்மட்டம் உயர்வு
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சரிந்து கொண்டிருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் 129.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 131.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,539 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 239 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் 143.83 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 145.83 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை நீடித்தால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 416 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக மணிமுத்தாறு பெருங்காலில் 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதுதவிர கடனா, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பி இருப்பதால் அணைக்கு வருகிற தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.