நடிகர் விஜய்க்கு எப்போதும் துணையாக இருப்பேன் - சீமான்
நடிகர் விஜய்க்கு இப்போது மட்டுமல்ல எப்போதும் துணையாக இருப்பேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள பிகில் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் தரப்பில் அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் பிகில் உட்பட எந்தப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். அதை மீறி சிறப்பு காட்சிகளை திரையிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய்க்கு இப்போது மட்டுமல்ல எப்போதும் துணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பிகில் திரைப்பட விவகாரத்தில், பழி வாங்கும் நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிராக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து விட்டனர். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது.
இது போல செய்வதால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகும். செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு எதிராக எதிர் வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது.
கத்தி, சர்கார் திரைப்படங்களைப் போல் பிகில் பிரச்சினையிலும் நடிகர் விஜய்க்கு உறுதுணையாக இருப்பேன். அவருக்கு, இப்போது மட்டுமல்ல எப்போதும் துணையாக இருப்பேன் என்று கூறினார்.