தி.மு.க. ஆட்சி வரும்.. ஆனால் வராது.. அமைச்சர் ஜெயக்குமார் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
தி.மு.க. ஆட்சி வரும் ஆனால் வராது என திரைப்பட காமெடி பாணியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னை,
சமூக நலத்துறை மானிய கோரிக்கையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் சேகர்பாபு, விரைவில் வரவுள்ள தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் பிரச்சினைகளை சரி செய்யும் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் வடிவேல் பட காமெடி வசனமான "வரும்... ஆனால் வராது" என கூறியதையடுத்து அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
அப்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, சமூக நலத்துறை அமைச்சர் படித்தவர் தானே என்றும், அவர் துறை சார்ந்த கேள்விக்கு ஏன் மற்ற அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். பெண் உரிமை பேசும் நிலையில், பெண் அமைச்சர் பதிலளிக்க அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறுப்பினர்களுக்கு பதிலளிப்பது அமைச்சர்களின் கூட்டு பொறுப்பு என்றார். கேள்விக்கு தொடர்புடைய அனைத்து அமைச்சர்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் பதிலளிப்பதாகத் தெரிவித்த அவர், இது கடந்த தி.மு.க. ஆட்சியிலும் நடந்துள்ளதாகவும் தேவைப்பட்டால் அவைக்குறிப்பை பார்க்கலாம் என்றும் கூறினார்.