சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழிலும் மொழிமாற்றம் செய்ய வேண்டும் : அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-03 23:53 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக் கது. அதே நேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

உலகின் மூத்த மொழியான தமிழிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடம் இருந்து சுப்ரீம் கோர்ட்டு கேட்டுப் பெறலாம்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வது பற்றி சுப்ரீம் கோர்ட்டுத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் விருப்பம் குறித்து வெளிவந்துள்ள செய்தியை ம.தி.மு.க. வரவேற்கிறது.

கோர்ட்டு நடவடிக்கைகளை, வக்கீல்களின் வாதங்களை, தீர்ப்பு ஆணையின் விவரங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த முயற்சி பெரிதும் பயன்தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், தெலுங்கு, அசாமி மற்றும் ஒரியா என 5 மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில், அந்தப் பட்டியலில் உயர் தனி செம்மொழியாகவும், இலக்கண இலக்கியங்களை நிரம்பப் பெற்று உலகின் மூத்த மொழியாகவும் திகழும் தமிழ் மொழி இடம் பெறாதது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்படுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதேவேளையில் அந்தப் பட்டியலில் தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும்; அத்துடன் 8-வது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளுக்கும் அந்த வாய்ப்பினை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீர்ப்புகளை வழக்குதாரர்களின் மாநில மொழிகளில் வெளியிடும் சுப்ரீம் கோர்ட்டின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாராட்டுக்கு உரியவர். அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் தமிழ் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஒரியா, அசாமி மொழிகளுக்கு தரப்படும் முன்னுரிமையை தமிழுக்கு தர மறுப்பது அநீதியாகும். செம்மொழியான தமிழுக்கு இவ்வாறாக இழைக்கப்படும் துரோகங்கள் தமிழர்களை காயப்படுத்துகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை ஐகோர்ட்டின் அலுவல்மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கடந்த 6.12.2006 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், இப்போது சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்புகளே மாநில மொழிகளில் வழங்கப்பட இருப்பதாலும், மாநில மொழிகளில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியே கூறியிருப்பதாலும் சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தமிழக சட்டசபைத் தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை சில பிராந்திய மொழிகளில் பதிவேற்றம் செய்ய நடைமுறைப்படுத்தி இருக்கும் சூழ்நிலையில் தமிழ் மொழியிலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மற்ற மொழிகளில் நடைமுறைப்படுத்தப்படும் போது தமிழிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். நிர்வாக ரீதியாக மொழிபெயர்ப்பிலும், மொழி ஆளுமையிலும் திறமையாளர்கள் தேவையென்றால் அதில் தனிக்கவனம் செலுத்தி விற்பன்னர் களை அணுகி நடைமுறைப்படுத்தலாம். தமிழக அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி உதவிட முன்வர வேண்டும். சுப்ரீம் கோர்ட்டும் இதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எடுத்த முன்முயற்சியின் காரணமாக மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தி, ஒரியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் முதலில் தீர்ப்புகள் வெளியிடப்படும் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த மொழிகள் பேசும் மாநிலங்களில் இருந்து வரும் மேல்முறையீடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

ஐகோர்ட்டின் அலுவல் மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட வகை செய்ய வேண்டும். அத்துடன் சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உலகம் முழுக்க கொண்டாடப்படும் மொழியாகவும், செம்மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

அலுவல் ரீதியாக பயன்படுவதற்கான அத்தனை கட்டமைப்புகளும் தமிழ்மொழிக்கு உண்டு. ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் அவசியம் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் கோரிக்கை விடுத்து உள்ளார். 

மேலும் செய்திகள்