ரெயில்களில் பாதுகாப்புக்கு செல்லும் ரெயில்வே போலீசாரை கண்காணிக்க நவீன செயலி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக, ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழக ரெயில்வே போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Update: 2019-06-30 21:32 GMT
சென்னை,

இந்த நிலையில் ரெயில்களில் தமிழக ரெயில்வே போலீசார், முழுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்களா? என்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் புதிய முறையை நடை முறைபடுத்த உள்ளனர்.

பொதுவாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரெயில்வே போலீசார் ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் ரெயில் நிற்கும்போதும், அங்கு உள்ள பெயர் பலகையின் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்து போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி பணியில் இருப்பதை உறுதி செய்வார்கள் அல்லது பதிவேட்டில் கையெழுத்திட்டு உறுதி செய்வார்கள்.

தற்போது ரெயில்வே போலீசாரின் புது முயற்சியாக, போலீசார் பணியில் இருப்பதை உறுதி செய்ய நவீன செயலி ஒன்றை அறிமுகப் படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
‘ஈ-பீட்’ எனும் இந்த நவீன செயலி மூலம், ரெயில்களில் முதல் மற்றும் கடைசி பெட்டியில் ஒட்டப்பட்டு இருக்கும் ‘பார் கோடை’ செல்போன் மூலம் போலீசார் ஸ்கேன் செய்தால், பணியில் இருக்கும் போலீஸ் எந்த இடத்தில் பயணித்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு சென்றுவிடும்.

இந்த ‘ஈ-பீட்’ எனும் செல்போன் செயலி மூலம் ரெயில் களில் ஒட்டப்பட்டு இருக்கும் ‘பார்கோடை’ ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் முதல் அல்லது கடைசி பெட்டிக்கு சென்று ஸ்கேன் செய்து பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது முதன் முறையாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இந்த புதிய முறை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி புளூ மவுண்டன், சேரன், திருவனந்தபுரம், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இந்த செயலி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறோம்.

இதில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வரை இந்த ‘ஈ-பீட்’ செயலி மூலம் தங்கள் வருகையை போலீசார் உறுதி வேண்டும். இத்திட்டம் விரைவில் அனைத்து ரெயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்