ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் தினசரி கொண்டுவர திட்டம்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் தினசரி குடிதண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2019-06-04 23:00 GMT
சென்னை, 

சென்னையில் கடந்த 2001-ம் ஆண்டு வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது ஈரோடு மற்றும் நெய்வேலியில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டு இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவர சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டு உள்ளது.

இதற்காக சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில் பாதையில் குடிநீர் ஆதாரங்கள் எத்தனை உள்ளன?, அங்கு எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது?, அப்பகுதியினரின் தேவைக்கு போக, சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர போதுமான தண்ணீர் அங்கு இருப்பு உள்ளதா? என்பது குறித்து கடந்த 2 வாரங்களாக சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து.....

அதன்படி மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சென்னைக்கு போதுமான அளவு தண்ணீர் கொண்டு வர முடியும் என்று அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. மேட்டூர் குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் அரக்கோணம் ஆகிய நகரங்களில் பதிக்கப்பட்டு உள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது.

இதில் எங்கு உள்ள கூட்டு குடிநீர் குழாய்கள் ரெயில் நிலையத்துக்கு அருகில் வருகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் அருகில் கூட்டு குடிநீர் குழாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தினசரி 25 மில்லியன் லிட்டர்

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

மேட்டூர் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் வேலூர் மாவட்டத்துக்கு தினசரி 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 160 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர வசதி உள்ளது. ஆகவே கூடுதல் தண்ணீரை குழாய் மூலமாக கொண்டு வந்து அந்த தண்ணீரை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் டேங்கர்கள் மூலம் சென்னைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.

2001-ம் ஆண்டு ஈரோட்டில் இருந்து 60 ரெயில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது 50 ரெயில் டேங்கர் மூலம் தினசரி தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. ஒவ்வொரு டேங்கரிலும் 50 ஆயிரம் லிட்டர் வீதம், மொத்தம் 50 டேங்கர்களில் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வர உள்ளனர். இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தெற்கு ரெயில்வே வணிகம் மற்றும் போக்குவரத்து பிரிவு மேலாளர்களிடம் பேசி வருகிறோம்.

ரூ.154.3 கோடி செலவு

ரெயில் டேங்கரில் தண்ணீர் கொண்டு வர வாடகை, தண்ணீர் எடுப்பதற்கான (பம்பிங்) செலவு, சுத்திகரிப்பு மற்றும் வினியோகம் ஆகியவற்றுக்காக சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.154.3 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. வில்லிவாக்கத்தில் உள்ள குடிநீரேற்று நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அமைச்சர் பேட்டி

இதுகுறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அவர், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் இதுபற்றி பேசப்பட்டது. அவசியம் இருந்தால் அதற்கான நடவடிக்கையை முதல்- அமைச்சர் மேற்கொள்வார். ஜெயலலிதா இருக்கும்போதே இந்த திட்டம் இருந்தது. ஆனால் நமக்கு இப்போது அதற்கான அவசியம் ஏற்படவில்லை’ என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேலும் கூறியதாவது;-

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம் இன்று (நேற்று) கோரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இது ஒரு அற்புதமான திட்டம். 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும்.

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்

அடுத்ததாக 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முழுமையாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்