மணல் கடத்தலை தடுத்தவர் கொடூரக் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டர் பங்களா முன் மறியல் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டர் பங்களா முன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டர் பங்களா முன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணல் கடத்தலை தடுத்தவர் கொலை
ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டையை அடுத்துள்ள இளமனூரை சேர்ந்தவர் மோகன் (வயது 47). முன்னாள் ஊராட்சி துணை தலைவரான இவர், ஒரு தனியார் கல்லூரி கேன்டீனில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், அர்ஜுன்(20) என்ற மகனும், நந்தினி(18), சுப்ரியா(15) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள புழுதிக்குளம் கண்மாயில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டு வந்ததாகவும், நேற்று முன்தினம் மணல் கடத்தலை மோகன் உள்ளிட்ட சிலர் தடுக்க முயன்றனர். அப்போது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மோகனை வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். மோகனுடன் சென்றிருந்த லட்சுமணன், செல்வம், சாத்தையா, முருகேசன் ஆகியோரும் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.
கலெக்டர் பங்களா முன் மறியல்
இந்தநிலையில் ராமநாதபுரம் கலெக்டர் பங்களா முகாம் அலுவலக நுழைவு வாசல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மோகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை திரண்டனர். கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அந்தபகுதியில் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரை சந்திப்பதில் உறுதியாக இருந்த போராட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலைமறியலை கைவிடமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்துவிட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
போராட்டத்தின் போது இளமனூரை சேர்ந்த சக்திவேல் மகன் முத்துபாண்டி (23), பத்மநாபன் மகன் மணிகண்டன்(21) ஆகியோர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு மேலும் அதிகமானது.
உடனே அங்கிருந்தவர்களும், போலீசாரும் அவர்களை தடுத்து காப்பாற்றினர். தீக்குளிப்பு முயற்சியை தடுக்க முயன்ற நம்புராஜனின் மனைவி மீனாட்சியின் (42) கண்ணில் பெட்ரோல் தெறித்து, கண்எரிச்சல் ஏற்பட்டதால் அவர் மயங்கிவிழுந்து உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
அவரும், தீக்குளிக்க முயன்ற 2 பேரும் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் உறுதி
இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட மோகனின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரை மட்டும் கலெக்டர் வீரராகவராவிடம், அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும், மோகனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன், இழப்பீடும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்த கலெக்டர் வீரராகவராவ், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நீடித்த சாலைமறியல் முடிவுக்கு வந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மோகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தி.மு.க. பிரமுகர் சரண்
மோகன் கொலை வழக்கில் தொடர்புடைய மஞ்சலோடை கருப்பையா மகன் ஆனந்தராஜ் என்பவர் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இவர் தி.மு.க. ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும், இவரது பெயரில்தான் கண்மாயில் மணல் அள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.