சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

Update: 2019-05-27 21:44 GMT
சென்னை,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆட்சி கவிழுமா? என்ற குழப்பமான நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான 9 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அதாவது, சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை), எஸ்.நாகராஜன் (மானாமதுரை), எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (சாத்தூர்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), சம்பத் (சோளிங்கர்), பி.கந்தசாமி (சூலூர்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகிய 9 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியும் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் நாளை (புதன்கிழமை) சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 123 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களின் பலமும் 110 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்