நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வாகை சூடியது

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது.

Update: 2019-05-23 23:30 GMT
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் வேலையில் ஈடுபட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது.

இதேபோல், தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவைகளுக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் 2-வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஏப்ரல் 18-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடந்த நிலையில், 35 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு சுற்றுவாரியாக வாக்குகள் கணக்கிடப்பட்டன. ஓரிரு இடங்களில் வாக்குகள் எண்ணும்போது சிறு, சிறு பிரச்சினைகள் எழுந்தாலும், சிறிய இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது.

நாடு முழுவதும் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. முன்னிலை வகித்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சியான தி.மு.க.வின் கையே ஓங்கியிருந்தது. காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலை வகித்து வந்தனர். தலைநகர் சென்னையை பொறுத்தவரை வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தி.மு.க.வே முன்னணியில் இருந்தது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை 4 தொகுதிகள் என்ற அளவிலேயே முன்னிலையில் இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல அதுவும் குறையத் தொடங்கியது. தர்மபுரியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஆனால், சில சுற்றுகளுக்கு பிறகு, அவர் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

அதேபோல், சிதம்பரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் இடையே கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே இருவருக்கும் முன்னிலை மாறி மாறி கிடைத்தது. இறுதியில் தொல்.திருமாவளவன் முன்னிலை வகித்தார்.

அ.தி.மு.க.வுக்கு ஒரே ஆறுதலாக தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் (துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்) மட்டும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் அவர் மட்டுமே வெற்றி பெற்றார். இறுதியில் தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அதிலும் தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினார்கள். அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வி அடைந்தார். புதுச்சேரியை காங்கிரஸ் கைப்பற்றியது.

அதேபோல், தி.மு.க. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடியது. அதேபோல், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மொத்தத்தில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களை பிடித்தது. இந்த தேர்தலில் தி.மு.க. 37 இடங்களை பிடித்திருக்கிறது.

மேலும் செய்திகள்