ஊட்டி 123-வது மலர் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 123-வது மலர் கண்காட்சி தொடங்கியது. உதகையில் 5 நாட்கள் நடைபெறும் மலர்க் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மெக்ஐவர் என்ற ஆங்கிலேயர் கடந்த 1857-ம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் விதைகள், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ்பெற்றது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை இன்று காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் மலர் மாடங்கள் மற்றும் அலங்காரங்களை பார்வையிட்டார்.