மு.க.ஸ்டாலின்-சந்திரசேகரராவ் சந்திப்பு நட்பு ரீதியானது பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

மு.க.ஸ்டாலின்-சந்திரசேகரராவ் சந்திப்பு நட்பு ரீதியானது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Update: 2019-05-14 22:15 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

நட்பு ரீதியான சந்திப்பு

ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி தொடரும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

பா.ஜ.க.வுடன் தி.மு.க. எதற்காக, என்ன பேசினார்கள்? என்பதற்கான உரிய பதிலை தமிழிசை தான் சொல்ல வேண்டும். கற்பனைக்காக எதையும் சொல்ல முடியாது. ஒருவர் சந்திப்பதை அரசியல் ஆக்குவது தி.மு.க.விற்கு கைவந்த கலை. தே.மு.தி.க. விவகாரத்திலேயே இது தெரியும்.

மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்ததில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாக தெரியவில்லை. நட்பு ரீதியாக நடந்த சந்திப்பாக தான் தே.மு.தி.க. கருதுகிறது.

ஜனநாயக நாடு

நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. மதத்தால் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பிறப்பால் கமல்ஹாசன் ஒரு இந்து. கமல்ஹாசன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அது மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் தவறானது தான். மதம், சாதி ரீதியாக பேசும் கருத்துகளை யோசித்து பேச வேண்டும்.

கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என்று ஏன் சொன்னார்? என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் தான் கேட்க வேண்டும். இதற்கு என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும்வகையில் வார்த்தைகளை யார் சொன்னாலும் தவறு தான்.

யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. இது ஜனநாயக நாடு. சுதந்திரமாக கருத்துகள் சொல்ல அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. சொல்லும் வார்த்தைகள் மற்றவர்களை புண்படுத்தாமல் இருக்கிறதா? என்று யோசித்து பேச வேண்டும். ஆனால் யாரையும் மிரட்டி கட்டுபடுத்தி பணிய வைக்க முடியாது.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்