மறுவாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் ‘மை’ தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மறுவாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் ‘மை’ வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 13 வாக்குச்சாவடிகளில் குளறுபடிகள் நடந்ததாக கூறி அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
13 வாக்குச்சாவடிகளிலும், கடந்த ஏப்ரல் 18–ந்தேதி நடந்த வாக்குப்பதிவின் போது வாக்களித்த வாக்காளர்களுக்கு ஓட்டு போட்டதன் அடையாளமாக இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு மறுவாக்குப்பதிவு நடக்க இருப்பதால், மீண்டும் அந்த வாக்காளர்கள் ஓட்டு போட வாய்ப்பு கிடைத்து உள்ளது. எனவே அவர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைப்பதற்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.