ஒற்றையடி பாதை நிச்சயம் தனிப்பாதையாக மாறும் “குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்துகிறோம்” லதா ரஜினிகாந்த் பேட்டி

‘குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்துகிறோம்’ என்றும், ‘இந்த ஒற்றையடி பாதை நிச்சயம் தனிப்பாதையாக மாறும்’, என்றும் லதா ரஜினிகாந்த் கூறினார்.

Update: 2019-05-07 22:45 GMT
சென்னை, 

‘குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்துகிறோம்’ என்றும், ‘இந்த ஒற்றையடி பாதை நிச்சயம் தனிப்பாதையாக மாறும்’, என்றும் லதா ரஜினிகாந்த் கூறினார்.

லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், ‘தயா’ பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமுதாயத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், பாதுகாப்பின்மை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை. குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்பதை பெரியவர்கள் கவனிக்காமல் போனதே எல்லா பிரச்சினைக்கும் காரணம். அதனால் தான் குழந்தை கடத்தல், குழந்தைகள் மீதான துன்புறுத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் இணைப்பு

இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு அளிக்கும் வகையில் ‘தயா’ பவுண்டேஷன் சார்பில் ‘பீஸ் பார் சில்ட்ரன்’ எனும் குழந்தைகள் பாதுகாப்புக்கான அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் கட்டணமில்லா தொடர்பு எண்ணாக 18001208866 அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த அமைப்பு, தற்போது தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் எல்லா மாநிலங்களிலும் எங்கள் ‘பீஸ் பார் சில்ட்ரன்’ அமைப்பின் கிளைகள் உருவாக்கப்பட்டு, நாடு முழுவதும் ஒரு இணைப்பை உருவாக்க இருக்கிறோம். குழந்தைகள் அக்கறையை விரும்பும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் எங்களுடன் கைகோர்க்கலாம்.

ஒற்றையடி பாதை

ஒவ்வொரு கிராமங்களிலும் குழந்தைகளின் பாதுகாப்பை மையமாக கொண்டு அலுவலகம் திறக்கப்பட இருக்கிறது. இது ஒரு ஒற்றையடி பாதை. நிச்சயம் இது தனிப்பாதையாக உருமாறும். குழந்தைகளின் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி, ஒரு சிறந்த சமுதாய மாற்றத்துக்கு தொடக்கமாக இருக்க விரும்பு கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ‘தயா’ பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரியை சேர்ந்த சிறுமி தாரிகாவை, லதா ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார்.

மேலும் செய்திகள்