நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் பா.ஜனதா வெற்றி பெற முடியாத மாநிலம் தமிழகம் கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவிலேயே பா.ஜனதா வெற்றி பெற முடியாத மாநிலம் தமிழகம் என்று கே.எஸ்.அழகிரி கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றின் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க தமிழக அரசு கேட்ட நிதியை பா.ஜனதா அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை எழுப்பியிருந்தோம்.
இதற்கு நேரிடையாக பதிலளிக்க முடியாத தமிழிசை சவுந்தரராஜன் தேவையில்லாமல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ‘தானே’ புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டாரா?, நிவாரண தொகை வழங்கினாரா? என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் பதில் பேசியிருக்கிறார்.
கடந்த டிசம்பர் 2011-ம் ஆண்டு ‘தானே’ புயல் காரணமாக கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட செய்தி வெளிவந்து 48 மணி நேரத்தில் அன்றைய மத்திய உள்துறை மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் நேரிடையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பதற்காக வந்தார். பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உடனடியாக கடன் வழங்குவதற்கு வங்கிகளின் தலைமை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே வரவழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்தியாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா கட்சியால் வெற்றி பெற முடியாத ஒரு மாநிலம் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழகம் தான். அதற்கு காரணம் பா.ஜனதாவின் இத்தகைய வஞ்சக போக்குகள் தான். இதனால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற இலக்கை நோக்கி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதை தாங்கிக்கொள்ள முடியாத தமிழிசை சவுந்தர ராஜன் வாதங்களை முன்வைக்க வேண்டுமே தவிர, விதண்டாவாதங்களை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.