தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகம் முழுவதும், ஒருசில அசம்பாவிதங்களை தவிர பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் வாக்குப்பதிவு நடந்ததாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
தமிழகம் முழுவதும், ஒருசில அசம்பாவிதங்களை தவிர பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் வாக்குப்பதிவு நடந்ததாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
எந்திரங்கள் பழுது
‘பூத் சிலிப்’ இல்லாததால் பலரும் ஓட்டுபோட முடியவில்லை என்றும், அதனால் பலர் வாக்கு செலுத்தாமலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டனர் என்றும் தகவல் வந்தது. பூத் சிலிப் பலருக்கு கொடுத்திருக்கிறோம். இதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் பேசி, தகுந்த அறிவுரையை வழங்கினோம்.
வாக்குப்பதிவு நடந்த போது பழுதானதால் 375 வாக்குப்பதிவு எந்திரங்கள், 228 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 766 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் மாற்றப்பட்டன.
ஏதாவது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 3 இடங்களில் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர். அதுபற்றிய விளக்கத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளேன்.
ஏற்கனவே ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் ஓட்டுப் பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டாலும் அதில் பிரச்சினை இருக்காது. பழுதான எந்திரத்தில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் அனைத்தும் ஓட்டு எண்ணிக்கையின்போது சேர்த்துக் கொள்ளப்படும். அது அழியாமல் அங்கேயே இருக்கும்.
போக்குவரத்து ஏற்பாடுகள்
வேலைக்காக வெளியூருக்கு சென்றுள்ளவர்கள், வெளியூரில் பணியாற்றுபவர்கள், வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்குச் செல்ல கடுமையாக சிரமப்பட்டனர் என்று கூறப்படுகிறது. 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால், பலரும் சொந்த ஊருக்கும், சுற்றுலாவுக்கும் செல்வார்கள். ஆனால் போக்குவரத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதில்லை.
தமிழ்நாட்டில் மகளிர் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என்றும், ஆண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என்றும் பிரித்து வைத்திருந்தோம். சில இடங்களில் ஆண், பெண் என்று தனியாகப் போகாமல், குடும்பமாக உள்ளே சென்று வாக்களித்தனர்.
மதுரை தவிர மற்ற வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மூடப்பட்டது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். வரிசையில் கடைசியில் நிற்கும் ஆள் வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
தமிழகமெங்கும் வாக்குப்பதிவின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை. வாக்குச்சாவடியை கைப்பற்றுவது போன்ற வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, ஓட்டு எந்திரம் வேலை செய்யவில்லை என்பது போன்றவற்றில் சிறிய சம்பவங்கள் ஏதாவது நடந்திருக்கலாம். பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற புகார் வந்துள்ளது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கமான அறிக்கை கேட்டுள்ளேன்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் அ.ம.மு.க. கட்சியின் தேர்தல் சின்னம் அமைந்துள்ள வாக்குப்பதிவு எந்திர பட்டனில் பிரச்சினை ஏற்பட்டது. அதை மாற்றிவிட்டார்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் போனவர்களின் கணக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். பலர் இடம் மாறிச் சென்றிருப்பார்கள். இவர்களுக்கு வேறு பகுதியில் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். அதற்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்களே பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று பல மாதங்களாக வாய்ப்பை அளித்திருந்தோம்.
வாக்குப்பதிவு நிறைவு
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. பல வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு மேல் வரிசையில் நின்று பலர் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் இரவு 7 மணி நிலவரப்படி ஏறத்தாழ 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதன் பிறகும் பதிவான ஓட்டுகள் குறித்த விவரங்களை மாவட்டங்களில் இருந்து முழு அளவில் பெற்ற பிறகு 70 முதல் 72 சதவீதம் வரை இது அதிகரிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் சராசரியாக 71.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் வரவில்லை. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் ராணிப்பேட்டை கீழ்விஷாரத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் அங்கிருந்த கூட்டத்தை கலைப்பதற்காக ஒருமுறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் யாரும் காயமடையவில்லை.
வாக்கு எண்ணிக்கை மையம்
தமிழகத்தில் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன. அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் அந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த மையங்களில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அவற்றை மையங்களில் உள்ள அறைகளில் அடைத்து வைத்து பூட்டிவிடுவோம். அந்த பூட்டை சீல் வைத்துவிடுவார்கள். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கையெழுத்து பெறப்படும்.
வாக்காளர்கள் பெயர்களை திட்டமிட்டு நீக்கியதாக காங்கிரஸ் தரப்பில் பொதுவான புகார் ஒன்று தரப்பட்டுள்ளது. எந்த வாக்குச்சாவடி, தொகுதி என்பதையெல்லாம் தெரிவிக்கவில்லை. எனவே அதை மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு அனுப்பி வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.