வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (18-ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்தலில் ஓட்டுக்காக பெருமளவு பணப்பட்டுவாடா இருக்கும் என தகவல்கள் வெளியானதால் பறக்கும் படைகள் அமைத்து தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்ததின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
கடந்த மாதம் 27-ந் தேதி இரவு வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரை முருகன் இல்லம், அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளிக்கூடத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து துரை முருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இல்லங்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து, மறுபடியும் வருமான வரி அதிகாரிகள் கடந்த 1-ந் தேதி சோதனைகள் நடத்தினர். அந்த சோதனைகளில் கட்டு கட்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தொகை, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததற்கு ஆதாரங்கள் சிக்கியதாகவும் தெரிகிறது.
பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதே நேரம் ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.