தமிழகத்தில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்? தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டது
நாடாளுமன்றம், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்? என்பதற்கான பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்றம், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிற நட்சத்திர பேச்சாளர்கள் யார்-யார்? என்பதற்கான பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ளார்.
அதில் கட்சி வாரியாக இடம் பெற்றுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் விவரம் வருமாறு:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேர் அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் பிரசாரம் செய்வார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, திண்டுக்கல் லியோனி, உதயநிதி ஸ்டாலின் உள்பட 40 பேர் தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் பிரசாரம் செய்வார்கள்.
பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 40 பேர் பா.ஜ.க.வில் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய மந்திரி பி.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி அனந்தன், நடிகை குஷ்பு உள்பட 40 பேர் காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் பிரசாரம் செய்வார்கள்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி உள்பட 16 பேர் பா.ம.க.விலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் உள்பட 40 பேர் தே.மு.தி.க.விலும் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட 20 பேர் ம.தி.மு.க.விலும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் உள்பட 20 பேர் சமத்துவ மக்கள் கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் பிரசாரம் செய்வார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், பிருந்தா கரத், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட 40 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்பட 40 பேர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் பிரசாரம் செய்வார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேர் நாம் தமிழர் கட்சியிலும், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 20 பேர் தமிழர் தேசிய முன்னணியிலும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பி.எஸ்.ஞானதேசிகன் உள்பட 20 பேர் த.மா.கா.விலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பேராசிரியர் ஞானசம்பந்தன், நடிகர் நாசர், நடிகைகள் ஸ்ரீபிரியா, கோவை சரளா உள்பட 10 பேர் மக்கள் நீதி மய்யத்திலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழக தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் உள்பட 40 பேர் பகுஜன் சமாஜ் கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் பிரசாரம் செய்வார்கள்.
இந்த கட்சிகள் தவிர அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் தேசியக் கட்சி, இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் நட்சத்திர பேச்சாளர்கள் அந்தஸ்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.