தென்சென்னையில் மீண்டும் வெற்றி பெற்றால் “பெருங்குடி குப்பை கிடங்கு அகற்றப்படும்” அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் வாக்குறுதி

“தென்சென்னை நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் பட்சத்தில் பெருங்குடி குப்பை கிடங்கு அகற்றப்படும்”, என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-03-24 22:15 GMT
சென்னை, 

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் ஜெ.ஜெயவர்தன் போட்டியிடுகிறார். மயிலாப்பூரில் நேற்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த ஜீப்பில் நின்றபடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணிக்கு மக்களின் பேராதரவு நிச்சயம் உண்டு. எனவே தென்சென்னை மட்டுமல்ல, தமிழகம்-புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ஜெயலலிதா மக்களுக்காக செய்த சாதனைகளும், நல்ல திட்டங்களும் என்றென்றும் நினைவுகூரத்தக்கது. அச்சாதனைகளை சொல்லி வாக்குகள் சேகரித்து வருகிறேன்.

தென்சென்னை தொகுதியில் ஏற்கனவே ரெயில்வே திட்டங்கள், குடிநீர் வசதிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் என பல திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி பெறப்பட்டு உள்ளன. பணிகளும் விரைவாக நடந்தும் வருகின்றன.

பெருங்குடி குப்பை கிடங்கு

இந்தமுறை மீண்டும் இத்தொகுதிக்கு நான் தேர்வாகும் பட்சத்தில் பெருங்குடி குப்பை கிடங்கு அகற்றப்படும். குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்.நட்ராஜ், விருகை வி.என்.ரவி, பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவகுமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஆனந்தன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் ஆகியோரும் பங்கேற்று ஜெயவர்தனுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.

மேலும் செய்திகள்