நாளை முதல் மு.க.ஸ்டாலின் 18 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (புதன் கிழமை) முதல் 18 நாட்கள் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2019-03-18 23:15 GMT
சென்னை, 

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (புதன் கிழமை) முதல் 18 நாட்கள் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் என்று தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

இருப்பினும், அ.தி.மு.க.- தி.மு.க. இரு அணிகளுக்கிடையே தான் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் புதிய தலைமையுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், அந்த கட்சிகளின் வெற்றி, தோல்வி குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் நேற்று முன்தினம் ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளின் வேட்பாளர்கள் ஓரிரு நாட்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து இரு கட்சிகளின் தலைமையும் தேர்தல் பிரசார பணிகளில் கவனம் செலுத்த உள்ளது. அதற்கு முன்பாக, தேர்தல் அறிக்கையை வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் என்பதால் தமிழகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தும் வகையிலான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். அந்தவகையில், கட்சிகளின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தநிலையில், இன்று (செவ்வாய்க் கிழமை) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட உள்ளார்.

இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம், மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, மாநில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, நாளை (புதன்கிழமை) முதல் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஏப்ரல் 6-ந்தேதி வரை அவர் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களையும் ஆதரித்தும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன்படி 20-ந்தேதி (நாளை) திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்.

அதன்படி 20-ந்தேதி காலை 10 மணிக்கு நாகை, திருவாரூர் தொகுதிகளை உள்ளடக்கிய பொதுக்கூட்டம் திருவாரூரில் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம்.

21-ந்தேதி மாலை 5 மணிக்கு முசிறி தாத்தையங்கார்பேட்டை சாலையில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம். 22-ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம். மாலை 5 மணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பிரசார பொதுக் கூட்டம்.

23-ந்தேதி காலை 10 மணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, அரூர் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அரூர் அண்ணா சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம். மாலை 5 மணி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம். 24-ந்தேதி வட சென்னை நாடாளுமன்ற தொகுதி, பெரம்பூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பெரம்பூரில் பிரசார பொதுக்கூட்டம்.

25-ந்தேதி காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருக்கழுக்குன்றத்தில் பிரசார பொதுக்கூட்டம். மாலை 5 மணிக்கு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஆவடியில் பிரசார பொதுக்கூட்டம்.

26-ந்தேதி மாலை 5 மணி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். 27-ந்தேதி தேனி நாடாளுமன்ற தொகுதி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். 28-ந்தேதி மதுரை, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள், சாத்தூர் சட்ட சபை தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம். 29-ந்தேதி சிவகங்கை, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், மானாமதுரை, பரமக்குடி சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்.

30-ந்தேதி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி, ஒசூர் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். 31-ந்தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதி, ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். ஏப்ரல் 1-ந்தேதி அரக்கோணம், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி, சோளிங்கர் சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். 2-ந்தேதி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்.

3-ந்தேதி திருப்பூர், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். 4-ந்தேதி பொள்ளாச்சி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். 5-ந்தேதி கரூர், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம். 6-ந்தேதி விழுப்புரம், ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் தொடங்கும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் 18 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்