பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் ஆர்.சரத்குமார் பேட்டி

சென்னை மணலி அருகே உள்ள சேலைவாயல் திருத்தங்கல் நாடார் கல்லூரியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2019-03-15 19:30 GMT
சென்னை

சென்னை மணலி அருகே உள்ள சேலைவாயல் திருத்தங்கல் நாடார் கல்லூரியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ–மாணவிகளுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் செல்லபழம், கல்லூரி தலைவர் மாரியப்பன், கல்லூரி முதல்வர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். நமது நாட்டில் தற்போது மேலை நாட்டு கலாசாரம் பரவி வருகிறது. கூட்டுக்குடும்பத்தில் செல்போனை பயன்படுத்தாமல் பெற்றோர்களுடன் குழந்தைகள் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் வெளியே நடக்கும் வி‌ஷயங்களையும் என்னென்ன பிரச்சினைகள் என்பது குறித்தும் பேசலாம். பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டாக இந்தக் குற்றங்கள் நடப்பது குறித்து காவல் துறைக்கும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் இருந்தது வியப்பாக உள்ளது.

எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின்பு நான் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.

 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்