நாஞ்சில் சம்பத் அன்றும் இன்றும்: திமுகவை விமர்சித்த அதே வார்த்தைகளை மாற்றி நேர்மாறாகப் பேசி உள்ளார்

திமுகவை விமர்சித்த அதே வார்த்தைகளை மாற்றி நேர்மாறாகப் பேசிய நாஞ்சில் சம்பத் சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்.;

Update:2019-03-05 12:08 IST
சென்னை,

கடந்த தேர்தலில் அதிமுகவுக்காக பரப்புரை மேற்கொண்ட போது, திமுகவை கடுமையாக சாடிய நாஞ்சில் சம்பத், தற்போது அதே வார்த்தைகளைக் கூறி தமது விமர்சனத்திற்கு நேர்மாறாகப் பேசியிருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்வேறு கால இடைவெளியில் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், அண்மைக் காலமாக அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த தேர்தலில், அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத்,

 "திமுக தரகுக்கடை; அதிமுக தமிழர்களின் கோட்டம்.

 திமுக வர்த்தகப் பண்ணை; அதிமுக வித்தகப் பாசறை.

 திமுக தேர்தலுக்காகவும் கலெக்‌ஷனுக்காகவும் இருக்கும் கட்சி; அதிமுக சேவைக்காகவும் தியாகத்திற்காகவும் இருக்கும் கட்சி. 

திமுக முத்தக் காட்சிகளால் நிரம்பிய கூடாரம்; அதிமுக ரத்தக் காட்சிகளால் வியாபிக்கப்பட்ட மாளிகை. 

அதிமுக ஏழை, எளிய தொண்டர்களின் கண்ணீராலும் ரத்தத்தாலும் கட்டப்பட்ட மாளிகை" என பேசினார்.

ஆனால், தற்போது, இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத்,

 "திமுக எலெக்‌ஷனுக்காகவும் கலெக்‌ஷனுக்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட கட்சி அல்ல. இது சேவைக்காகவும் தியாகத்திற்காகவும் இருக்கும் இயக்கம். 

இது வர்த்தகப் பண்ணை அல்ல; வித்தகப் பாசறை.

 இது தரகுக் கடை அல்ல; தமிழர்களின் கோட்டம். 

இது முத்தக் காட்சிகளால் நிரம்பிய கூடாரம் அல்ல, ரத்தக் காட்சிகளால் வியாபிக்கப்பட்ட மாளிகை. 

ஒரு தலைவன் படிப்படியாக வளர்ந்து அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஆகாயம் அண்ணார்ந்து பார்த்த அண்ணா இருந்த இடத்தில் எங்கள் அண்ணன் ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். 

ஆயிரம் பிறை கண்ட கலைஞர் உட்கார்ந்த இடத்தில், தொடர்ந்து பாயிரம் பாடுவதற்கு அண்ணன் ஸ்டாலின் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார்" என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.

முன்பு அதிமுக மேடையில் பேசியதை, வார்த்தை மாறாமல் அப்படியே திமுக மேடையில் நாஞ்சில் சம்பத் மாற்றி பேசியதை  நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்