இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது ஆண்களை விட பெண்கள் அதிகம் தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இருக்கிறார்கள்.

Update: 2019-02-01 00:15 GMT
சென்னை, 

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1.1.2019 தேதியை வாக்காளராக தகுதி பெறும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர் 1-ந்தேதியன்று தொடங்கின. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தங்கள், இடம் மாறுதல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதிவரை பெறப்பட்டன.

இந்த காலகட்டத்தில் வாக்காளராக பெயர் சேர்ப்பதற்காக 14 லட்சத்து 29 ஆயிரத்து 471 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 13 லட்சத்து 96 ஆயிரத்து 326 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகியவை காரணமாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 937 பெயர்கள் நீக்கப்பட்டன. பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 2 லட்சத்து 21 ஆயிரத்து 351 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 392 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 301 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 92 லட்சம் பேர் ஆண்கள், 2 கோடியே 98 லட்சம் பேர் பெண்கள், 5,472 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்கள்.

இறுதி வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டசபை தொகுதியாக காஞ்சீ புரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி விளங்குகிறது. அங்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 102 பேர் ஆண்கள், 3 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 75 பேர்.

சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதி குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி. உள்ளது. இங்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 87 ஆயிரத்து 39 பேர் ஆண்கள், 79 ஆயிரத்து 427 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 49 பேர்.

அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் சென்னையும், 2-வது இடத்தில் காஞ்சீபுரமும், 3-வது இடத்தில் திருவள்ளூரும் உள்ளன.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்களில், 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 பேர் ஆண்கள், 19 லட்சத்து 43 ஆயிரத்து 78 பேர் பெண்கள், 932 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 36 லட்சத்து 90 ஆயிரத்து 997 வாக்காளர்களில், 18 லட்சத்து 26 ஆயிரத்து 614 பேர் ஆண்கள், 18 லட்சத்து 64 ஆயிரத்து 23 பேர் பெண்கள், 360 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 32 லட்சத்து 34 ஆயிரத்து 706 வாக்காளர்களில், 16 லட்சத்து 5 ஆயிரத்து 908 பேர் ஆண்கள், 16 லட்சத்து 28 ஆயிரத்து 89 பேர் பெண்கள், 709 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது. அங்கு மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 654 பேர் ஆண்கள், 2 லட்சத்து 53 ஆயிரத்து 25 பேர் பெண்கள், 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

18 முதல் 19 வயது வரையிலான இளம் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம். அங்கு 7,696 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,189 பேர் ஆண்கள், 3,507 பேர் பெண்கள்.

வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

வாக்காளர் பட்டியலை http://elections.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் காணலாம். அதில் ஒவ்வொருவரும் தங்களின் பெயர் இருக்கிறதா?, சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலை தொடர்ச்சியாக திருத்தும் நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

கடந்த ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் எவராவது தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றால், அவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். www.nvsp.in என்ற வலைத்தள இணையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் குறித்த தகவல்களை அறியலாம்.

தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை 180042521950 என்ற இலவச எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வாக்காளர் பட்டியலில் காணப்பட்ட இரட்டை பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதா?

பதில்:- புதிய சாப்ட்வேர் (மென்பொருள்) மூலம் இரட்டை பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. இரட்டை பதிவுகள் அனைத்துமே நீக்கப்பட்டு உள்ளதா? என்பதை கூற முடியாது. அவற்றை நீக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளதா?

பதில்:- நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக் கான தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம். தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

ஓசூர் தொகுதி தொடர்பான அறிக்கையை சட்டமன்ற செயலாளர் இன்னும் தேர்தல் கமிஷனிடம் வழங்கவில்லை. அது கிடைத்தவுடன் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

கேள்வி:- தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடைபெற வாய்ப்பு உள்ளதா?

பதில்:- இங்கு இதுவரை ஒரே கட்டமாகத்தான் நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து வருகின்றன. இப்போதும் அப்படித்தான் இருக்கும்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தல் வரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியுமா?

பதில்:- 18 வயது நிரம்பியவர்கள் யாரும் தங்களின் பெயரை தேர்தல் அறிவிக்கப்படும் வரை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கலாம். நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்