தினத்தந்தி இலங்கை பதிப்பு அவ்வை நடராஜன், தங்கர்பச்சான் வாழ்த்து

இலங்கையில் 18-வது பதிப்பை தொடங்கிய தினத்தந்திக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2019-01-25 21:45 GMT
சென்னை, 

இலங்கையில் ‘தினத்தந்தி’ பதிப்பு தொடங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

நாட்டு மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எப்போதும் இடம் பிடித்து தலைமையான நிலைமை பெற்றிருப்பது தினத்தந்தியாகும். எளிமையாக கருத்துகளை வலிமையாக வழங்கி வருகின்ற தினத்தந்தி விடியலில் நமக்குப் பள்ளி எழுச்சி பாடும் ஒப்பற்ற ஏடாகும். எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களுக்கும் அரசியலைக் கற்றுத்தந்து உலகைக் கண்ணாடியாகக் காட்ட வேண்டும் என்பது தான் பெருந்தகை ஆதித்தனாரின் தனி முயற்சியாகும். பொதுப்பணியும், தமிழ்ப் பணியும் தென்காசிக்கு ஆற்றிய திருப்பணியும் சிவந்தி ஆதித்தனாரின் பெருமையை என்றும் பேசும். அந்த வகையில் கடல் தாண்டி மேலை நாடுகளுக்கும் பதிப்புப் பணிகள் மேன்மேலும் ஓங்கிச் சிறப்படைவதை இப்போதே காண்கிறேன்.

தலைமுறை தலைமுறையாக தழைத்து வரும் தினத்தந்தி 3-ம் தலைமுறையின் முன்னேற்ற முகமாக 18-ம் பதிப்பினை இலங்கையில் வெளியிடுவது மகத்தான பணியாகும். தமிழுணர்வை ஊட்டுவதில் வீரகேசரிக்கும் வெற்றி முகம் உண்டு. சிவந்தி ஆதித்தனாரை தொடர்ந்து சிகரத்தைத் தொடும் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கடல் தாண்டி உறவு வளர்ப்பதில் முதன்மை பெற்றிருக்கிறார். வீர கேசரியோடு இணைந்து தினத்தந்தி வெளிவருவது கடல் தாண்டித் தமிழர்கள் கை குலுக்குவது போல் அமைக்கிறது. பாராட்டி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராம கோபாலன்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

நமது தினத்தந்தி ஸ்ரீலங்காவில் மற்றுமொரு பதிப்பு துவங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மேலான தலைமையின் கீழ் இந்த சாதனை நடந்திருப்பது வாழ்த்துக்குரியது. மேலும், தமிழ் பேசும் தரணியெங்கும் தினத்தந்தி அதிக பதிப்புகள் மூலம் பரவிட செந்தில் ஆண்டவரை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கர்பச்சான்

திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதேவேளையில் தமிழினத்தின் மூச்சான தமிழ் மொழி தேய்ந்தும், அழிந்தும் வருவதை நாம் கண்டுகொள்ளவில்லை என்பது தான் கசப்பான உண்மை. இவ்வேளையில் இதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக ‘தினத்தந்தி’ நாளேடு இலங்கை தலைநகர் கொழும்பில் பதிப்பை தொடங்கியிருக்கும் செய்தி மகிழ்ச்சி ஊட்டுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காப்பாற்றப்பட்டு வளர்த்து வந்த தமிழ்மொழி 30, 40 ஆண்டுகளில் அழிந்தும், தேய்ந்தும் வருவதை எவரும் கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட வேளையில் தினத்தந்தியின் சேவையை எழுத்தில் வடித்துவிட முடியாது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் செயலை துபாய் நாட்டில் பதிப்பை தொடங்கியபோதே ‘தினத்தந்தி’ தொடங்கிவிட்டது. இப்போது இலங்கை அடுத்ததாக எல்லையை விரித்தால் தமிழ்தாய் தினத்தந்தியை வாழ்த்தி வணங்குவாள். ஒரு தமிழ் குடிமகனாக இருந்து நானும் ‘தினத்தந்தி’ நாளிதழை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஞானதேசிகன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தினத்தந்தி நாளிதழ் தன்னுடைய பதிப்பை இலங்கையில் தொடங்குகிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ‘சிங்களத் தீவுக்கோர் ஒரு பாலம் அமைப்போம்’ என்று பாரதியார் பாடினார். இன்று தமிழர்களையும், இலங்கை வாழ் மக்களையும் இணைக்கின்ற பாலமாக தினத்தந்தி நாளிதழ் திகழப்போவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், இலங்கை - இந்திய பத்திரிகை தொடர்பாளர் மணவை அசோகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (தினகரன் பிரிவு) மாநில பொதுச் செயலாளர் எஸ்.தினகரன், சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இட்லி இனியவன் ஆகியோரும் தினத்தந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்