ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நரசிம்மன் யார்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக பதிவான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த பி.எம்.நரசிம்மன் யார்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-12-03 22:00 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வைரக்கண்ணன் என்பவர், ‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஓட்டுபோட வாக்காளர்களுக்கு பணம், தங்கம் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கியதாக டி.டி.வி.தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ ஆகியோர் மீது போலீசில் புகார் செய்ய தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும், இதுவரை புகார் செய்யவில்லை’ என்று கூறியிருந்தார்.

இதேபோல, ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை கிழக்கு இணை போலீஸ் கமிஷனர் மனோகரன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் வக்கீல்கள், ஐகோர்ட்டு உத்தரவிட்டு ஒரு ஆண்டு கடந்தும், இதுவரை இணை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று வாதிட்டனர்.

வழக்கு ரத்து

அரசு குற்றவியல் வக்கீல் சபீதாராணி, ‘அறிக்கை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வேண்டும்’ என்றார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. மதியம் 2.15 மணிக்கு இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அப்போது குற்றவியல் வக்கீல், ‘தேர்தல் ஆணையத்தின் புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை, ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கடந்த மார்ச் மாதமே ரத்து செய்துவிட்டார்’ என்று கூறி, அந்த தீர்ப்பின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதைக் கண்டு அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்தனர். வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அப்போது மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.

யார் அவர்?

பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தும் கடந்த மார்ச் 13-ந் தேதி வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது’ என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, ‘வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் யார்?, இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர்.

‘வழக்கை தொடர்ந்தவர் பி.எம்.நரசிம்மன். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. அதனால் இவருக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்தனர். அவர் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, உத்தரவை பெற்றுள்ளார். மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதா? என அரசு தரப்பிடம் கேட்டு சொல்கிறேன்’ என்று தலைமை குற்றவியல் வக்கீல் பதிலளித்தார்.

சி.பி.ஐ. விசாரணை

அப்போது மனுதாரர் மருதுகணேஷ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும் விதமாக, சி.பி.ஐ. வசம் அந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது. அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை கிழக்கு இணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதில், வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் ரத்தாகும் வரையும், குற்றவாளிகளின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை? என்பது உள்பட விரிவான விளக்கம் அளிக்கவேண்டும். வழக்கை ரத்துசெய்யக்கோரி மனு தாக்கல் செய்த பி.எம்.நரசிம்மன் யார் என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் டி.ஜி.பி., வருமான வரித்துறை இயக்குனர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள், அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டுள்ளது? என்று வருமான வரித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.

தள்ளிவைப்பு

சென்னை கிழக்கு இணை போலீஸ் கமிஷனராக முன்பு பதவி வகித்த மனோகர், தற்போது பதவி வகிக்கும் அன்பு ஆகியோரும் தனித்தனியாக பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்