குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மையம் அடுத்த வாரம் திறக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மையம் அடுத்த வாரம் திறக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.;

Update:2018-10-25 03:30 IST
தாம்பரம்,

சிறுநீரக கோளாறால் அவதிப்படும் ஏழை நோயாளிகளின் வசதிக்காக அவர்கள் இலவசமாக ‘டயாலிசிஸ்’ செய்வதற்காக சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் 3 ‘டயாலிசிஸ்’ கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கருவிகள் அமைக்கப்பட்டு 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரையிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்காக வரும் ஏழைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.

அடுத்த வாரம் திறப்பு

இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போது ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மையம் திறக்கப்படாமல் உள்ளது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். உடனடியாக அவர், டாக்டர்களை அழைத்து அது குறித்த விவரங்களை கேட்டார்.

பின்னர் அடுத்த வாரம் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மையம் திறக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மையத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் சோதனை முறையில் செயல்படுத்தும் பணிகளை தொடங்கும்படியும் டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

முன்னாள் எம்.பி.யும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.தன்சிங் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்