வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வரத்து: வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் தீவிரம்

வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

Update: 2018-07-31 23:15 GMT
சேத்தியாத்தோப்பு,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணை வழியாக கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியை வேகமாக எட்டியது.

இதையடுத்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.

கீழணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியை கடந்த 27-ந் தேதி வந்தடைந்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 32 அடியில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40.50 அடியாக இருந்தது.

இதே அளவு தண்ணீர் வந்தால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் வீராணம் ஏரி மொத்த உயரமான 47.50 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைப்பதற்காக சேத்தியாத்தோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை நேற்று முன்தினம் காவிரிநீர் தொட்டது.

இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக ராட்சத குழாய்கள், மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வீராணம் ஏரி நிரம்பியதும் முதலில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதன் தொடர்ச்சியாக சேத்தியாத்தோப்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார். 

மேலும் செய்திகள்