வாடகை பணம் தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு
வீட்டு வாடகை பணம் தராததால் வீட்டில் சிறைவைக்கப்பட்ட மூதாட்டியை போலீசார் பூட்டை உடைத்து மீட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு, காசிமாநகரை சேர்ந்தவர் ரங்கநாதன், மீன் வியாபாரம் செய்துவருகிறார். இவரது வீட்டில் பாப்பாத்தி (வயது 65) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பூ வியாபாரம் செய்துவரும் பாப்பாத்தி 3 மாதங்களுக்கு ஒருமுறை வாடகை பணத்தை சேர்த்து கொடுப்பாராம்.
கடந்த 4 மாதங்களாக அவர் வாடகை கொடுக்கமுடியாமல் காலம்தாழ்த்தி வந்தார். இதனால் ரங்கநாதனுக்கும், பாப்பாத்திக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்துவைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப்பாத்தியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய வீட்டையும் பூட்டிக்கொண்டு ரங்கநாதன் வெளியூர் சென்றுவிட்டார்.
பாப்பாத்தி காலையில் எழுந்துவந்து பார்த்தபோது வீடு வெளியே பூட்டியிருந்தது தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து செல்போனில் தனது சகோதரிக்கு தகவல் கூறினார். இரவில் இருந்து எதுவும் சாப்பிடாததால் மயக்கமான நிலையில் படிக்கட்டில் விழுந்துகிடந்தார்.
தகவல் அறிந்து அவரை பார்க்கவந்த உறவினர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காசிமேடு போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த பாப்பாத்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
வெளியூர் சென்ற வீட்டின் உரிமையாளர் ரங்கநாதன் பாப்பாத்தி வீட்டில் இருப்பது தெரியாமல் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றாரா? அல்லது வாடகை பணம் கொடுக்காததால் பூட்டிவிட்டுச் சென்றாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.