ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை
சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது ஜூன் மாதத்துக்குள் கிளை மன்றங்களை அமைக்க அவர் உத்தரவிட்டார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்றுமுன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததால், அவர்களுடன் 10-ந்தேதி (நேற்று) ஆலோசனை நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று காலை 10.45 மணி முதல் 12 மணி வரை ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் ரஜினிகாந்த் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சி, ஒன்றியம், நகரம், மண்டல கிளை மன்றங்களை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும். 30 பேர் கொண்ட கிளை மன்றங்களை அமைக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் 62 ஆயிரத்து 552 கிளை மன்றங்கள் திறக்கப்பட வேண்டும்.
இந்த பணிகளை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். அவர் வழங்கிய அறிவுரைகள், ஆலோசனைகளால் 100 மடங்கு சக்தி அதிகரித்தது போல் நாங்கள் உணர்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.