காவிரி விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வருகிற 14-ந் தேதி வரை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் அளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-
காவிரி நதிநீர் இறுதி தீர்ப்பை செயல்படுத்திடும் வகையில், மே 14-ந் தேதிக்குள் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யவேண்டும், என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய கால அவகாசத்தின் தொடர்ச்சியாக, மீண்டும் கால அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நீதித்துறையில் சர்வ வல்லமை படைத்த சுப்ரீம் கோர்ட்டு தனது இறுதித்தீர்ப்பிற்கு செயல் வடிவம் கொடுக்க, மத்திய அரசே தடையாக இருப்பதும், அதை ஒவ்வொருமுறையும் தாராளமாக ஏற்று, கால அவகாசம் வழங்கி வருவதும், சுப்ரீம் கோர்ட்டின் மீது தமிழக மக்களும், விவசாயிகளும் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை பெருமளவு குறைத்துவிட்டது.
கர்நாடக தேர்தல் லாபத்திற்காக, காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் இதுவரை தடுத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், தீர்ப்பை நிறைவேற்ற தேவையான உண்மையான அழுத்தத்தை கொடுக்காமல் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்ட அ.தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற 14-ந் தேதி நிச்சயமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, இறுதி தீர்ப்பின் பலனை தமிழக விவசாயிகள் அனுபவிப்பார்களா என்பதை அறுதியிட்டு, உறுதி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பில் சுப்ரீம் கோர்ட்டு இருக்கிறது. அந்த பொறுப்பை 14-ந் தேதியாவது நிறைவேற்றி, இந்திய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தங்கள் வயிற்றில் உயிர்ப்பால் வார்த்து உதவிடாதா? என்று தமிழக மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.:-
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கான சுப்ரீம் கோர்ட்டின் 3-வது காலக்கெடுவையும் மத்திய அரசு மதிக்க தவறியிருக்கிறது. வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் காவிரி சிக்கலில் தமிழகத்துக்கு மத்திய அரசு மீண்டும் துரோகம் இழைத்துள்ளது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-
நீதிக்கு தலை வணங்குவது தான் இதுவரை நடைமுறை. நீதியே தலை வணங்கும் அவல நிலையை தான் இன்றைய நடவடிக்கைகள் நாட்டுக்கு அறிவிப்பதாக உள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-
மோடி அரசுக்கு உதவும் விதமாக தொடர்ந்து காவிரி பிரச்சினையில் கால அவகாசம் வழங்கி வரும் சுப்ரீம் கோர்ட்டின் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பது அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். இத்தகைய அநீதியை எதிர்த்து உறுதியான போராட்டங்களை முன்னெடுத்து செல்லவேண்டும் என தமிழக மக்களையும், அரசியல் கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க கர்நாடக காங்கிரஸ் அரசும், மத்திய பா.ஜ.க. அரசும் தயாராக இல்லை. மொத்தத்தில் 2 தேசிய கட்சிகளும் தமிழக நலன் சார்ந்த இயக்கங்களாக செயல்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. நீதிக்கு உட்பட்டு செயல்பட்டு ஜனநாயகத்தில் நீதியை நிலைநாட்டவேண்டியது மத்திய- மாநில அரசுகளின் கடமை.
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
தமிழக மக்களின் நியாயத்தை தன் சுயநலத்துக்காக மத்திய அரசு சிதைத்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக காத்திருந்த தமிழகம் தற்போது வரைவு திட்டத்துக்காக காத்திருக்கவேண்டிய அவலத்தை ஏற்படுத்திய பா.ஜ.க. அரசுக்கும் அதன் கூட்டாளியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கும் தமிழகம் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.