கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கூறிய அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம்
கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பாலினத்தை கூறிய அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூர்,
கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பாலினத்தை கூறிய அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் டாக்டர் தமயந்தி ராஜ்குமார் (வயது 53). இவர் ஆத்தூரில் ‘மதுரா’ என்ற பெயரில் மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து கூறி வந்துள்ளார்.
இது குறித்து மருத்துவத்துறை இயக்குனருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து ஆய்வு நடத்தினார்கள். மேலும் அங்கு பரிசோதனைக்காக காத்திருந்த கர்ப்பிணிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் பார்த்து கூறியது தெரியவந்தது. இதனால் அந்த ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
விசாரணையை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மருத்துவத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் மகளிர் போலீசார் டாக்டர் தமயந்தி ராஜ்குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே தன்னை கைது செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்த டாக்டர் தமயந்தி ராஜ்குமார், திடீரென்று மயங்கி விழுந்தார்.
இதைத்தொடர்ந்து அவரை அதிகாரிகள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக தெரிவித்தனர். இதன்படி பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, டாக்டர் தமயந்தி ராஜ்குமாரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.