வருமான வரி சோதனை என மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, நடிகர் சத்யராஜ் பதில்

வருமான வரி சோதனை என மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு, நடிகர் சத்யராஜ் பதில் அளித்துள்ளார்.

Update: 2018-04-09 23:15 GMT
சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் திரையுலகத்தினர் சென்னையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பதற்காக ராணுவமே வந்தாலும், நாங்கள் பயப்படாமல் போராடுவோம்’ என்று கூறினார்.

இதற்கு கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘ராணுவம் தேவை இல்லை. வருமான வரி சோதனை வந்தாலே நீங்கள் பயந்துவிடுவீர்கள்’ என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து நேற்று நடந்த தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடக்க விழாவில் சத்யராஜ் பேசியதாவது:-

நான் ஒரு சாதாரண நடிகர். அப்பா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை என் வீட்டுக்கு வருமான வரித்துறை சோதனை வந்ததில்லை. நடிக்க வந்தபோதுகூட ஏதாவது தவறு செய்திருப்போம். இப்போது முன்பைவிட உஷாராக, அதாவது நேர்மையாக இருக்கிறேன். என்னை மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. ஒரு மாபெரும் அரசியல் தலைவர், அப்பா வேடத்தில் நடிக்கும் என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம்.

எனக்கு அரசியல் கனவு கிடையாது. தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் குரல் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமையாக நினைத்து குரல் கொடுக்கிறேன். முன்னாடி நின்று விரல் சொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் என்னிடம் இல்லை. என்னைவிட சிறந்த தலைவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைவரும் ஒன்றுசேர்ந்து களத்தில் இறங்கி போராடுவோம்.

உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டு போட்டிகள் அவசியம் தான். ஆனால் உரிமைக்கான போராட்டத்தில் இளைஞர்கள் இருக்கும்போது இந்த ஐ.பி.எல். போட்டி தமிழகத்தில் நடத்தவேண்டாம். இளைஞர்களின் போராட்ட கவனம் திசைமாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நேரத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்