காவிரி பிரச்சினை வெகு விரைவில் பா.ஜ.க. நடவடிக்கையால் தீர்க்கப்படும் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை
காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகளால் தீர்க்கப்படாத காவிரி பிரச்சினை பா.ஜ.க.வின் நடவடிக்கையினால் தீர்க்கப்படும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு சட்ட ரீதியாக எந்தெந்த வகையில் இறுதி தீர்ப்பை செயலாக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இதில் மத்திய அரசு ஸ்கீம் பற்றிய விளக்கம் கேட்டுக்கொண்டதின் பெயரில் இது ‘வழி காட்டும் குழு’ என்பதனையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு, இவர்கள் சொல்வது தவறு என்று உணர்த்துவது போல மத்திய அரசு விளக்கம் கேட்டு கொடுத்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அதேபோல ஸ்கீம் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல சற்று கால அவகாசத்தையும் நீடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல மத்திய அரசு சட்ட ரீதியாக சரியான நகர்வை தான் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது. அதனால் மத்திய அரசை குறைகூறுவது தேவையற்றது.
சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு அதற்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுத்ததன் மூலம் மத்திய அரசின் நடவடிக்கைகள் சரி என்று சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக்கொள்கிறது. ஆக, இனிமேலும் சுய அரசியல் லாபத்திற்காக போராட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு மக்களை இடையூறு செய்து சுயநலத்திற்காக போராடும் கட்சிகள் உடனே போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகளால் தீர்க்கப்படாத காவிரி பிரச்சினை வெகு விரைவில் பா.ஜ.க.வின் நடவடிக்கையினால் தீர்க்கப்படும். இனிமேல் போராட்டம், தீக்குளிப்பு, கடையடைப்பு என எதிர்மறை அரசியலில் இருந்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு தமிழகம் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி நீரை பா.ஜ.க. அரசு நிச்சயம் கொண்டு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.