சவாலை முறியடிப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் பொறியாளர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்

உணவு தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுப்புறச்சூழல் துறைகளில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று பொறியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-12-23 23:30 GMT
சென்னை,

இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 32-வது இந்திய பொறியியல் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு தமிழகத்துக்கு முதன் முறையாக வந்துள்ளேன். இந்த மாநிலம் பொறியியல் வல்லுனர்களின் நிலம் என்பது மட்டுமல்ல நாட்டுக்காக பெரும் பங்களிப்பை அளித்துள்ள சமூக பொறியியலாளர்களின் இடமும் இந்த மாநிலம் தான்.

தமிழர்களின் வரலாற்றை திரும்பிப்பார்த்தால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் இந்திய பெருங்கடலில் கடற்படை கப்பல்களும், வணிக கப்பல்களும் உலவியது நினைவுக்கு வரும். அதற்கு முன்பாகவே பல்லவர் காலத்தில் கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களை மாமல்லபுரத்தில் காண முடியும்.

மாமல்லபுரத்தில் இயற்கை அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் முறைகள், இந்த பொறியியல் மாநாட்டுக்கு பொருத்தமாக உள்ளன. இவையெல்லாம் பொறியியலில் உள்ள நவீனத்தை வெளிப்படுத்தும் சில உதாரணங்களாகும்.

ராஜாஜி, பெரியார் காலத்தில் இருந்தே சமூக சீர்திருத்தங்களின் சுவடுகள் பதிக்கப்பட்டு வருகின்றன. நமது பசுமைப் புரட்சியும், உணவில் பெற்றுள்ள தன்னிறைவு நிலையும், தமிழகத்தின் ஜாம்பவான்களான மறைந்த சி.சுப்பிரமணியனையும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனையுமே சேரும்.

தமிழக சமுதாயத்தில் சீர்திருத்தங்களின் பயணமும், மக்கள் நலனும் அண்ணா, காமராஜர் காலத்தில் தொடர்ந்தன. அந்த வரிசையில் உள்ள எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஜெயலலிதா மேலும் முன்னேற்றம் அடையச் செய்தார்.

அதே நேரத்தில் அரசியல் களத்தில் பேச்சாற்றல் மிக்க தலைவர் கருணாநிதியின் பங்களிப்பையும் மறந்துவிட முடியாது.

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டம்தான், இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு சத்து குறைவு ஏற்படுவதை தடுக்கவும், அவர்களின் உடலையும், அறிவாற்றலையும் வளர்ப்பதற்கான திட்டங்களைக் கொண்டுவர முன்னோடியாக அமைந்தது.

ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் என எந்த தொழில் என்றாலும், பொறியியலை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஒரு நிலையான தொழில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி இருப்பது தமிழகம்தான்.

கடந்த 18-ம் நூற்றாண்டில் இருந்து 21-ம் நூற்றாண்டு வரை மட்டுமல்லாமல், எதிர்காலத்தின் எழுத்தாகவும் பொறியியல்தான் உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கும் பொறியியல் வல்லுனர்கள்தான் துணை நிற்கின்றனர்.

உணவு தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய துறைகளில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் பொறியாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். அதுவும் குறிப்பாக, செலவு குறைவாக வீடுகளைக் கட்டுதல், மிகக் குறைந்த அளவிலான சேதத்துடன் நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்களிப்பைத் தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசினார். விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரும் பங்கேற்றார்.

முன்னதாக மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஜனாதிபதியை, விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். இரவில் அங்கேயே தங்கினார்.

மேலும் செய்திகள்