2ஜி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின் பேட்டி

2ஜி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2017-12-21 23:30 GMT
சென்னை,

2ஜி வழக்கில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இந்த தீர்ப்பு தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. தீர்ப்பு வெளியானவுடன் சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீடு முன்பு தொண்டர்கள் குவிந்தனர்.

அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லம் முன்பு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அண்ணா அறிவாலயத்திலும் ஏராளமான தொண்டர்கள் கூடி பட்டாசு வெடித்தனர்.

அறிவாலயம் வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் தனது அறையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அங்கும் ஏராளமான தொண்டர்கள் கூடி பட்டாசு வெடித்தனர். தி.மு.க.வை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களை பார்த்து மு.க.ஸ்டாலின் கைகளை அசைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என்று கருணாநிதி ஏற்கனவே 2ஜி வழக்கு பற்றி ஒரே வரியில் தெரிவித்து இருந்தார். அதன்படி, இன்றைக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பின் மூலம் அநீதி வீழ்ந்திருக்கிறது, அறம் வென்றிருக்கிறது. நானும், பொதுச்செயலாளர் க.அன்பழகனும் கருணாநிதியிடம் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தோம். மிகுந்த மகிழ்ச்சியோடு எங்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இது வரலாற்று சிறப்புமிக்கதொரு தீர்ப்பு. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடப்பட்ட வழக்கு தான் இந்த 2ஜி வழக்கு. இதை பெரிய அளவில் சித்தரித்து, பொய் கணக்குகளை எல்லாம் காட்டி இந்த வழக்கை திணித்தார்கள். அப்படிப்பட்ட இந்த வழக்கிலிருந்து அனைவருமே குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு டெல்லியில் உள்ள தனி நீதிமன்றம் மூலம் கிடைத்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

எனவே, தி.மு.க.வை பொறுத்தவரையில் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதை தனி நீதிமன்றம் தெளிவாக தங்களது தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் பலரும் திட்டமிட்டு தி.மு.க.வுக்கு எதிரான பல கட்சிகள் மட்டுமல்ல, பல்வேறு ஊடகங்களும் இணைந்து, தி.மு.க.வை களங்கப்படுத்த எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றனர்.

அதற்கு உதாரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்ட முடியும். ஆனால், இன்றைக்கு அது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. தி.மு.க. களங்க மற்றது என்பது தீர்ப்பின் மூலமாக வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரையில் அங்கு போட்டியிடும் அ.தி.மு.க.வும் சரி, அந்த கட்சியில் இருந்து பிரிந்து போட்டியிடுபவர்களும் சரி, நிச்சயமாக டெபாசிட் இழப்பார்கள். எனவே, தீர்ப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் தொடர்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்