ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் மகள் வீட்டில் ரூ.33 கோடி தங்க-வைர நகைகள் கொள்ளை

துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், அவரது மகனுக்கு ‘ஐ’ சினிமா பாணியில் விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்ததாகவும் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2017-12-18 22:45 GMT
சென்னை,

சென்னையில் ராமநாதபுரம் சமஸ்தான மன்னரின் மகள் வீட்டில் ரூ.33 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகள் மற்றும் பொருட்கள் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், அவரது மகனுக்கு ‘ஐ’ சினிமா பாணியில் விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்ததாகவும் பரபரப்பு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை கணபதி காலனியில் வசிப்பவர் கார்த்திக் சேதுபதி (வயது 38). இவர் நேற்று தனது மனைவி கனகமதி மற்றும் 2 குழந்தைகளோடு கண்ணீர் விட்டு அழுதபடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவரும், அவரது மனைவியும் கண்ணீருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். கார்த்திக் சேதுபதி கூறியதாவது:-

எனது தாயார் விஜயா நாச்சியார், ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் சண்முகராஜேஸ்வர நாகநாத சேதுபதி - சமந்தகமணி நாச்சியார் ஆகியோரின் மூத்த மகள். விஜயா நாச்சியார் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் சென்னையில் அரசு பணியாளராக வேலைபார்த்து வாழ்ந்து வந்தார்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை சட்டப்பூர்வமாக தத்தெடுத்து வளர்த்தார். இதனால் நானும், ராமநாதபுரம் சமஸ்தான வாரிசு ஆனேன். சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த மற்றவர்கள், சமஸ்தான வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எனக்கு பல வகைகளிலும் தொல்லை கொடுத்தார்கள். என்னோடு சமாதானமாக பேசுவதற்காக நெல்லைக்கு அழைத்தனர்.

கடந்த 12-ந் தேதி சமாதான பேச்சுவார்த்தைக்காக நான் நெல்லைக்கு சென்றேன். அங்கு ஒரு ஓட்டலில் என்னை 3 நாட்கள் சிறை வைத்து அடித்து உதைத்து தாக்கினார்கள். வெற்று தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள். துப்பாக்கியை காட்டி மிரட்டி நீ எல்லாம் ராஜ குடும்ப வாரிசா? என்று தரக்குறைவாக திட்டினார்கள்.

‘ஐ’ சினிமா பாணியில் 2 நச்சுக்கிருமி ஊசிகளை என் உடலில் செலுத்தினார்கள். இதனால் நான் மயக்கம் அடைந்தேன். 3 நாட்களுக்கு பிறகு என்னை சென்னையில் கொண்டுவந்து விட்டனர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ரவுடி ஒருவர் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது மனைவியை மிரட்டி ரூ.33 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.

இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் குடும்பத்தையே நாசப்படுத்திவிடுவேன் என்று மிரட்டினார்கள். நான் சென்னைக்கு வந்த பிறகும்கூட எங்கள் வீட்டிற்கு வெளியே 2 ரவுடிகள் காவல் காத்தனர். எங்களை வீட்டிற்கு வெளியே செல்லவிடாமல் தடுத்தபடி நின்றனர். அதன்பிறகு எங்கள் வழக்கறிஞர்கள் வந்து தான் எங்களை மீட்டனர். தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் கொடுத்தோம். 2 போலீசார் மட்டும் எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்தார்கள். நடந்த சம்பவம் பற்றி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றனர். எனக்கும், எனது குடும்பத்திற்கும் நேர்ந்த இந்த கொடுமைகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கார்த்திக் சேதுபதியின் மனைவி கனகமதி கூறியதாவது:-

நானும், எனது கணவரும், 2 குழந்தைகளும் உயிருக்கு பயந்த நிலையில் உள்ளோம். கே.கே.நகரைச் சேர்ந்த ரவுடி ஒருவர் என் வீட்டிற்கு வந்து துப்பாக்கி முனையில் மிரட்டினார். என் மாமியாரான விஜயா நாச்சியார் தற்போது உயிரோடு இல்லை. ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த வீட்டில் தான் தற்போது நாங்கள் வசிக்கிறோம். அவர் எனக்கு சீதனமாக கொடுத்த பழமையான பூர்வீக நகைகளை கே.கே.நகர் ரவுடி கொள்ளையடித்துச் சென்றார்.

வைரமாலை, முத்துமாலை, யானை தந்தத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் நகைப்பெட்டி, வைரத்தோடுகள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், தங்க விநாயகர் சிலை மற்றும் 50 பவுன் தங்க நகைகள் இவற்றோடு எனது கணவரின் இன்னோவா காரையும் அந்த ரவுடி எடுத்துச் சென்றுவிட்டார்.

பாஸ்போர்ட், வங்கி காசோலை புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் ரவுடி தூக்கிச் சென்றுவிட்டார். எனது மாமியார் விஜயா நாச்சியார் உயிரோடு இருந்தவரை அவரது குடும்பத்தினர் எங்களை நெருங்க முடியவில்லை. அவர் இறந்த பிறகு இப்போது அவர் கொடுத்த சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முதல்கட்டமாக ரூ.33 கோடி மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட சீதன பொருட்களை அபகரித்துள்ளனர். கொள்ளையடித்து சென்றுள்ள நகைகளை மீட்டுத்தர வேண்டும். எங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்