ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது அக்குபஞ்சர் டாக்டர் தகவல்
ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டதால் தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என அக்குபஞ்சர் டாக்டர் கூறி உள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அது பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தியது.
இதுவரை 16 பேரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமியின் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அந்த 16 பேரில் 10 பேர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் தர்மராஜ், நாராயணபாபு, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குனர் விமலா மற்றும் கலா, மயில்வாகனன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அவர்கள் கொடுத்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் ஆஜரானார். ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டு உள்ளது. அதுவே அவர் உடலநல பாதிப்புக்கு காரணம் என ஆணையத்தில் ஆஜராஜன பின் அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி அளித்து உள்ளார்.மேலும் அவர் கூறும்போது :-
2016 சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளித்தேன்; அதனால் கால் வீக்கங்கள் குறைந்து நன்றாக நடந்தார்.
ஜெயலலிதாவை அப்பலோவில் அனுமதித்தபின் சந்திக்க முயற்சித்தேன், முடியவில்லை. ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் ஜெயலலிதாவுக்கு கொடுத்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறினார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.
முதலில் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவ் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ந்தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். அதற்கு அடுத்த நாள் அதாவது 21-ந்தேதி ராம மோகனராவ் ஆஜராக உள்ளார்.
இதற்கிடையே விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து விசாரணை ஆணையத்தின் கால அளவை நீட்டிக்க கோரிக்கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.