‘பாரதியாரின் பாடல்களை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்’ துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

‘பாரதியாரின் பாடல் களை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

Update: 2017-12-10 23:00 GMT
சென்னை,

வானவில் பண்பாட்டு மையம் மற்றும் பாரதீய வித்யா பவன் சார்பில் பாரதி திருவிழா (தேச பக்திப் பெருவிழா) சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவனில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை-ஜனாதிபதி வெங்கையா நாயுடு குத்துவிளக்கு ஏற்றி, பாரதியார் படத்துக்கு பூக்களை தூவி விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பாரதியாரின் வாக்கை பின்பற்றி காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக மத்திய புலனாய்வு பிரிவின் (சி.பி.ஐ.) முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு 2017-ம் ஆண்டுக்கான பாரதி விருதை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பாரதிக்கு பிறந்தநாள் காணும் இன்று (நேற்று) ராஜாகோபாலாச்சாரியருக்கும் பிறந்தநாள். தமிழும், தமிழ்நாடும் என் மனத்திற்கு நெருக்கமானவை. இந்த நிகழ்ச்சியில் தமிழ் செம்மொழியில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்களே எனக்கு தமிழ் தெரியும். ஆனால் பேச முடியாது. தமிழக கவர்னர் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்த பின்னர் 28 மொழிகள் தெரியும். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும், பொதுமக்களின் சேவையில் இருந்து ஓய்வு பெறவில்லை.

தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும். அனைவரும் முதலில் தாய் மொழியில் பேசவும், கற்கவும் வேண்டும். முதலில் தாய், அடுத்து பிறந்த மண், தாய் மொழி, தாய்நாடு, குரு ஆகியவற்றை நினைக்கவேண்டும். தற்போது கூகுளில் அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. ஆனால் அது குருவாக முடியாது.

தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். பாரதியார் அடுத்த ஆயிரம் ஆண்டிற்கான மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பாடல்களை எழுதியுள்ளார். முதலில் நாடு, அடுத்து தங்களின் கட்சி, அடுத்து தன் சுயநலம் என இருக்கவேண்டும். ஆனால் தற்போது சிலர் கடைசியில் உள்ள சுயநலத்தை முதலில் வைத்துள்ளனர்.

பாரதியின் பெயர் மிகவும் உந்துதல் அளிப்பதாக இருக்கிறது. பாரதியின் கவிதைகள் நாட்டின் விரிவான செயல் குறித்தும் இருப்பதால் அவரை ‘மகாகவி’ என அழைக்கலாம். அவரின் கவிதைகள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. அவர் மகாகவி மட்டும் அல்ல. ‘தேசிய கவிஞர்’ ஆவார்.

பாரதியார் போன்றே வ.உ.சிதம்பரம்பிள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மன், பசும்பொன் முத்துராமலிங்கதேவர் போன்றவர்களும் தேசிய அளவில் சிறப்பானவர்கள். பாரதியின் தொலைநோக்கு பார்வை சுதந்திர வேட்கையை தருவதாக இருந்தது. அந்த அளவுக்கு அவருடை பார்வை விரிந்து காணப்பட்டது. பாரதியார் 3 வெளிநாட்டு மொழி உட்பட 32 மொழிகளை தெரிந்து வைத்து இருந்தார். வீட்டில் தாய்மொழியில் பேச வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் முதலில் தாய் மொழியும், அடுத்து அங்குள்ள சிறுபான்மை மொழியையும் கற்க அனுமதிக்கவேண்டும்.

தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சுதந்திர போராட்ட வீரர் பாரதியார் பிறந்து வாழ்ந்துள்ளார். அவர் இந்தியா முழுவதையும் இணைத்து பாடியுள்ளார். பாரதி சாதி, மதம் பார்க்காமல் வாழ்ந்தவர். பெண் அடிமையை எதிர்த்தவர். எனவே அவருடைய பாடல்களை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்